Thursday, January 8, 2009

மன்மோகன் சிங்கிற்கு கருப்புக் கொடி 2000-க்கும் மேற்பட்டவர்கள் கைது

சென்னை சன 8: சிங்களப் பேரினவாத அரசுக்கு துணையாக ஆயுதங்களையும் ஆலோசனைகளையும் வழங்கி தமிழர்களின் இனப் படுகொலைக்கு ஆதரவாக இருக்கும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு எதிராக கருப்புக் கொடி காட்ட
முயன்ற இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழின உணர்வாளர்கள் இன்று சென்னையில் கைது செய்யப்பட்டனர்.

வெளிநாடு வாழ் இந்தியர்கள் மாநாட்டிற்காக சென்னை வந்திருந்த இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் அந்த வழியாக பயணிப்பதை ஒட்டி அவருக்கு அங்கு கருப்புக் கொடி காட்டி தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்கும் நோக்கோடு இன்று காலை 8 மணிக்கு சென்னை, சைதாப்பேட்டை அருகே பெண்கள், குழந்தைகள் உட்பட பெருந்திரளான தமிழின உணர்வாளர்கள் கூடினர்.

மன்மோகன் சிங்கே திரும்பிப் போ!
இந்திய அரசே இலங்கைக்கு ஆயுத் தராதே!
சிங்களன் உனக்கு பங்காளியா தமிழன் உனக்கு பகையாளியா!
காங்கிரஸ் கைக்கூலி கருணாநிதியே ஒழிக!
தமழின விரோத காங்கிரசை தமிழ்நாட்டை விட்டு விரட்டுவோம்!
விடுதலைப் புலிகளை ஆதரிப்போம்! பிரபாகரனை அதரிப்போம்!
தமிழீழத்தை அங்கீகரி!

என பல்வேறு முழக்கங்களை எழுச்சியுடன் எழுப்பினர்.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், புதுவை,மதுரை, கோவை, சேலம், ஈரோடு, திருச்சி, தஞ்சை, நெல்லை உட்பட தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் தமிழின உணர்வாளர்கள் கொந்தளிப்போடு திரண்டிருந்தனர்.

தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன், பெரியார் திராவிடர் கழகத்தின் ஆனூர் ஜெகதீசன், கோவை இராமகிருட்டிணன், விடுதலை இராசேந்திரன், தமிழ்த் தேச விடுதலைக் கட்சியின் தியாகு, அகில இந்திய சமதாக் கட்சி துணைத் தலைவர் குமரி நம்பி, பார்வர்டு பிளாக்கின் ஆனந்த முருகன், தமிழ்த் தேசப் மார்க்சியக் கட்சியின் இராசேந்திர சோழன், தமிழர் தன்னுரிமை இயக்கத்தின் பாவலர் இராமச்சந்திரன், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் வைகறை, உழைக்கும் மக்கள் விடுதலை இயக்கத்தின் மெல்கியோர், மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சியின் கவிஞர் தமிழேந்தி, வாலாஜா வல்லவன், தலைநகர் தமிழ்ச்சங்கத்தின் உஞ்ஞை அரசன் மற்றும் தேனிசைச் செல்லப்பா, சந்திரேசன், பொன்னிறைவன், அற்புதம் அம்மாள் உட்பட பல்வேறு தமிழ் அமைப்புகளின் தலைவர்களும் தோழர்களும் கலந்து கொண்டனர்.

மன்மோகன் சிங் அவ்விடத்தை கடக்கும் நேரம் நெருங்கியவுடன் காவல்துறையினர் கூடியிருந்த அனைவரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் மொத்தம் 22 பேருந்துகளில் ஏற்றப்பட்டு அருகில் உள்ள 8 திருமண மண்டபங்களில் வைக்கப்பட்டுள்ளனர்.

0 comments: