Monday, April 21, 2008

அடையாள அரசியலும் "இந்து"வின் ஆத்திரமும் - பேரா. மருதமுத்து

அடையாள அரசியலுக்கு எதிராக-குறிப்பாக மொழிவழித் தேசிய (மாநில) அரசியலுக்கு எதிராக-இந்து நாளேடு நஞ்சைக் கக்கியுள்ளது.

26-03-08 அன்று அந்த ஏட்டின் தலையங்கத்துக்கு எதிர்ப்பக்கக் கட்டுரை ஒன்றில் இந்த நஞ்சு நிரம்பி வழிகிறது. "அடையாளமும் பிரிவினைவாதமும்: இனவழித் தேசியத்தின் அரசியல்" என்பது கட்டுரைத்தலைப்பு இக்கட்டுரையுடன் பிரசுரிக்கப்பட்டுள்ள ஒளிப்படத்தில் அசாமிலிருந்து அசாமிய உரிமை கோருவோரால் விரட்டப்பட்ட ஏழை பீகாரிகள் சிலர் பரிதாபகரமாகக் காட்சியளிக்கின்றார்கள்.

அடடா, இந்துவுக்குத்தான் ஏழை எளியோர் மீது எவ்வளவு அக்கறை, கருணை?

அசாம் மாநிலத்தின் உரிமை கோருவோர் ஏழை எளியோர்க்குப் பெரும் எதிரிகளாவர் என்று பிரச்சாரம் செய்கிறது இந்துவின் படத்தோடுகூடிய இந்தக் கட்டுரை.

"உனது மொழிவழிமாநிலத்தில் உனக்குப் பிழைக்க வழியில்லை யென்றால். நீ வேறு எங்காவது போய் எப்படியாவது பிழைத்துகொள். மத்திய, மாநில அரசுகள் உனக்குப் பொறுப்பில்லை. போகிற இடத்தில் குறைந்த கூலிக்குக் கொத்தடிமையாக வேலை செய்துகொள். உன்னால் வேலைவாய்ப்பு பறிபோகும் அல்லது கூலியில் குறைவு ஏற்படும் நிலையிலுள்ள அந்தந்த மாநிலத்து ஏழை மக்கள் பாதிக்கப்பட்டால் அவர்கள் போராடக்கூடாது. அப்படியே போராடுவது தேசிய நலன்களுக்கு எதிரானது. அந்த பாதிப்பில் வரும் எதிர்ப்பு என்பது மொழிவழித் தேசிய அரசியல். அது வன்முறை அரசியல்," என்கிறது இந்தக் கட்டுரை.

உழைக்கும் மக்கள் தங்கள் மொழிவழிச் சமூகத்திலிருந்து வேரோடு பறித்தெடுக்கப்பட்டு வேறுவேறு பகுதிகளுக்குக் கொண்டுசெல்லப்பட்டு அநாதைகளாகக் குடியமர்த்தப்பட்டு ஒட்டச் சுரண்டப்பட்டது முன்பு காலனியாட்சிக் காலத்தில் நிகழ்ந்த கொடுமை. அதன் விளைவுகளை மலேசியா போன்ற நாடுகளில் இன்றளவும் அனுபவித்து வருகிறார்கள் சாமானிய மக்கள். வரலாற்றுப் பூர்வமாக நேர்ந்துவிட்ட இந்தக் கொடுமைகளிலிருந்து மீண்டுவர ஜனநாயக சக்திகளும், மனித நேய வாதிகளும் பெருமுயற்சி செய்ய வேண்டியுள்ளது. இந்நிலையில் இந்திய மேல்தட்டினர் பழைய காலனியாதிக்க முறைகளுக்குப் புதிய தேசிய முலாம் பூசித் தொடர்ந்து கையாண்டு வருகிறார்கள். இதன்மூலம் புதுப்புதுச் சிக்கல்களை மக்கள் மத்தியில் உருவாக்கிப் பிரிவுகளையும், பிளவுகளையும் ஓயாமல் தோற்றுவித்தபடி யிருக்கிறார்கள்.

இந்திய உழைக்கும் மக்களை (மொழிவழி) மாநிலத்துக்கு மாநிலம் பந்தாடுவதால் உழைப்பாளிகளின் ஒட்டுமொத்த வர்க்க நலன்கள் கடுமையாகப் பாதிக்கப்படும்.

முதலாவதாக வேற்றுமொழி மாநிலத்துக்கு இடம்பெயரும் ஏழைகள் சமூகச் சூழலில் ஒட்டி உறவாட முடியாத நிலை ஏற்படுகிறது. மொழி மற்றும் பண்பாடு வேறுபடுவதால் இப்படி ஏற்படுகிறது. இதன் காரணமாக, அநத மாநில அரசியலில் மக்கள் சக்தி ஒன்றுபட்டுத் திரண்டெழ முற்படுகையில், இந்த வெளியார் அதற்குத் தடையாக மாறுகிறார்கள். தாங்கள் குடியேறிய மாநிலத்தின் மொழியும், பண்பாடும் பேணிப் பாதுகாக்கப் படுவதில் அக்கறை யற்றவர்களாகவும் அமைகிறார்கள். மலேசியாவின் நிலைமை வேறு. அங்கே விடுதலை பெற்ற பின் பெரும்பான்மையினர் ஜனநாயகத்தைப் புறக்கணித்துவிட்டு சிறுபான்மைத் தமிழரை ஒடுக்குகின்றனர். இங்கே இந்தியாவில் பல்வேறு மொழிவழி மாநிலத்தவர் அகில இந்திய ஆதிக்கச் சக்திகளுக்கெதிரான போராட்டத்தில் உள்ளனர். ஆதிக்கச் சக்திகளே மொழிவழி அடையாள அரசியலை முறியடிக்க வேறுபட்ட மொழி பேசும் ஏழை எளியோரைப் பயன்படுத்த முனைந்துள்ளனர். இந்த வெளியார் தாம் குடியேறிய மாநிலத்தவரின் உரிமைப் போராட்டத்தில் அக்கறை காட்டுவதில்லை என்பதோடு கூட அகில இந்திய ஆதிக்கத்தின் வாக்குவங்கிகளாகவும் செயல்படுகிறார்கள்.

உழைக்கும் மக்களின் போராட்டங்களை முறியடிக்க, காலங்காலமாக உடைமைவாதிகள் பிரித்தாளும் சூழ்ச்சியைப் பயன்படுத்திவந்துள்ளார்கள் என்பது வரலாற்று உண்மை. முன்னாளில் தஞ்சைவட்டார மிட்டா மிராசுகள் தங்கள் பகுதியின் தாழ்த்தப்பட்ட விவசாயத் தொழிலாளிகளை அடக்கி ஒடுக்கவும், கூலியைக் குறைக்கவும் வேண்டி இராமநாதபுரம் போன்ற தென்மாவட்ட ஏழைகளை இறக்குமதி செய்வதும், காரியம் முடிந்ததும் விரட்டிவிடுவதும் நடைமுறையாக இருந்துள்ளது. அதே முறையை மொழிவழிமாநிலச் சக்திகளை ஒடுக்குவதற்குப் பயன்படுத்துகிறார்கள் இந்திய மேல்தட்டினர். "பெருமுதலாளிகள் இந்தியா முழுவதிலும் கட்டற்ற முறையில் வேட்டையாடலாம்", என்பதை மறைத்துவிட்டு "ஏழை எளியோர் எந்த மாநிலத்திலும் சென்று உழைத்துப் பிழைக்கலாம்" என்பதை முன்நிறுத்தி ஏமாற்றப் பார்க்கிறார்கள். ஏழைகள் தங்கள் மொழிவழிச் சமூகத்திலேயே உழைத்து வாழ வழி செய்தாக வேண்டும் என்பதே ஜனநாயகக் கோரிக்கை. அதற்குப் பதிலாக அவர்களை இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வாங்குவங்கி அடிமைகளாக, ஆதிக்க விளையாட்டின் பகடைக்காய்களாக மாற்றப் பார்க்கிறார்கள்.

இந்திய மக்களின் அடிப்படைத் தேவை மொழிவழி (மாநில) அடையாள மும் அதன் வழி அரசியல் அதிகாரமும். குறிப்பாக ஏழைகளுக்கும், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் இது உயிராதாரமான தேவை.

ஆனால் இந்த மொழிவழி அடையாளத்துக்கு எதிராக இந்தியன் என்ற இல்லாத ஒன்றை அடையாளத்தை முன்வைக்கிறது "இந்து" வகையறா.

இந்த அகில இந்திய அடை யாளந்தான் என்ன என்று ஆராய்ந்தால் அது இந்திய குபேரர்களின் அடை யாளமாகவும், ஆங்கிலம், இந்தி இவற்றின் மூலம் தம்மை ஆதிக்க நிலைக்கு உயர்த்திக் கொண்டிருக்கும் மேல்நடுத்தரவர்க்கத்தின் அடை யாளமாகவும், மேற்கத்திய-இந்துத்துவ கலவைக் கலாச்சாரத்தின் அடையாளமாகவும் உள்ளது.

இந்த ஆதிக்க அடையாளத்துக்கு எதிரான மொழிவழி, மக்கள் சார்ந்த அடையாள அரசியலை இந்திய மேல்தட்டினர் அடியோடு வெறுக்கிறார்கள். அதுகுறித்து அவதூறு பரப்புகிறார்கள். இந்த வெறுப்பும், அச்சமும் ஈழப்பிரச்சினையில் தெளிவாக வெளிப்படுகின்றன. இப்போது திபெத் பிரச்சினையிலும் வெளியாகியுள்ளன. இதே 26-3-08 தேதியிட்ட இந்து ஏட்டின் தலையங்கமும் இதற்கு எடுத்துக்காட்டு துணைத் தலையங்கம் ஏதுமின்றி மிக நீளமாக அமைந்துள்ள இத்தலையங்கம் "திபெத் பிரச்சினை" என்று தலைப்பில் எழுதப்பட்டுள்ளது. திபெத் மக்களின் மொழிவழித் தேசிய உரிமையை சீனா தன் காலின் கீழ்ப்போட்டு மிதித்து நசுக்கிவைத்திருப்பதை இந்த "இந்து" தலையங்கம் முழுமையாக ஆதரித்துள்ளது.


இந்து கூறுகிறது:-சீனத்தின் ஆட்சியில் திபெத் பொருளாதாரம் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி கண்டுள்ளது.

இந்து மறைக்கிறது:-திபெத் வளர்ச்சியின் பயனை அனுபவித்துவருபவர்கள் திபெத்தில் குடியேறியுள்ள பெரும் எண்ணிக்கையிலான சீனர்கள்.

இந்து கூறுகிறது:-திபெத் மாநிலத்தில் வாழும் திபெத்தியர் எண்ணிக்கை 26 இலட்சம்தான். மொத்த திபெத்தியர்களோ 65 லட்சம் பேர் அதாவது திபெத்தியர்களில் 100க்கு 60 பேர் சீனாவின் பிற மாநிலங்களில் வசிக்கிறார்கள். எனவே அவர்கள் வாழும் சீன மாநிலங்களைப் பிரித்து திபெத்துடன் இணைத்துத் தருமாறு சீனத்திடம் கோருவது தவறு. ஏனெனில் அது சீனாவின் அரசியல் அமைப்பபை பாதிப்பதாக அமையும்.

இந்து மறைப்பது:-சீனத்தின் சமூக அமைப்பு உண்மையான சோசலிச முறையன்று. அங்கே அரசும் பெருமுதலாளித்துவமும் கைகோர்த்து இயங்கி வருகின்றன. அரசியலில் எந்த உரிமையும் யாருக்கும் கிடையாது. இம் என்றால் சிறைவாசம, ஏன் என்றால் வனவாசம் நிலைமைதான். இந்நிலையில் திபெத் அவர்கள் கையில் என்ன பாடுபட்டிருக்கும் என்பதை எவரும் எளிதில் ஊகிக்கலாம். திபெத்துக்குள் சீன ஹான் இனத்தவரைத் திட்டமிட்டுக் குடியமர்த்துவதும், திபெத்தியர்களைப் பிழைப்புக்காக அண்டை மாநிலங்களில் சென்று அடையாளமிழந்து வசிக்கச் செய்வதும் அரசின் முக்கிய கொள்கைகளாக இருந்து வந்திருக்கின்றன. (இந்திய மேல்தட்டு இப்படிப்பட்ட மக்கள் குடியேற்றக் கொள்கையைத்தான் நுட்பமாகக் கடைப்பிடித்துவருகிறது).

இப்போது திபெத்தியர்களின் தாயகத்தை மறுசீரமைப்புச் செய்வதென்றால் அதில் எந்தப் பெரிய தடையும் இல்லை. யார் இந்த அலங்கோல நிலையை ஏற்படுத்தினார்களோ அவர்களே செய்துவிடமுடியும். அதற்கான அதிகாரம் அவர்களிடம் உள்ளது. ஆதிக்க ஆசை மட்டுமே தடுக்கிறது.

இந்தப் பின்னணியில் இந்து பத்திரிகை இந்திய அரசுக்குப் பரிந்துரை செய்கிறது:- திபெத் பிரச்சினையில் சீனத்துக்குத் துணையாகச் செயல்படுங்கள். (சிங்கள அரசுக்குத் துணை போவதிலும் இந்துக்கு இதே நிலைப்பாடுதான்.)

இதே தேதியிட்ட இந்து நாளேட்டின் 12-ம் பக்கத்தில் ஒரு செய்தியை மகிழ்ச்சியோடு வெளியிட்டிருக்கிறார்கள்.

லீ ஜின்ஜுன். இவர் சீனப் பொதுவுடைமைக் கட்சியின் மத்தியக் குழுவில் முக்கிய பொறுப்பு வகிப்பவர். இவர் காங்கிரஸ் கட்சித் தலைமை நிலையத்துக்கு நேரில் சென்று பேசியிருக்கிறார். 1988ல், அன்றைய பிரதமர் ராஜீவ்காந்தி சீனத்திற்கு வந்ததை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகத் தங்கள் கட்சி கருதுவதாகவும் அந்த நிகழ்வின் 20-ஆம் ஆண்டுவிழாவை சீனக்கட்சி கொண்டாட விருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் அந்நிகழ்வுக்கு வரும் இந்தியப் பிரதிநிதிகளின் தலைவராக ராகுல்காந்தி வந்து சிறப்பிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

1988ல் ராஜீவ் சீனாவுக்குச் சென்று "வரலாற்று முக்கியத்துவமிக்க" முறையில் உறவாடியபோது இங்கே ஈழப்பிரச்சினையில் இந்திய அரசு வரலாற்றுத் தவற்றைச் செய்துகொண்டிருந்தது. இப்போது மீண்டும் இந்திய அரசு அதே தவற்றைச் செய்து வருகையில் சீனமும் திபெத்தில் "வரலாறு" படைத்திருக்கிறது.

இந்துவோ எல்லாம் ஏழைகளைக் காப்பாற்றத்தான் நடக்கிறது என்றும் உரிமைகளை விட்டுக்கொடுத்து விட்டால் வளர்ச்சி நிச்சயம் என்றும், வளர்ச்சி அதிகரித்தால் ஆளுக்குக் கொஞ்சம் பிட்டுப்பிட்டு வீசுவோம், பொறுக்கிக் கொள்ளலாம என்றும் சத்தியம் செய்கிறது. ஆனால்-ஈழத்தவரும், திபெத்தியர்களும், இந்தியாவின் மொழிவழி மாநில ஜனநாயகவாதிகளும் பொறுக்கித் தின்னும் முடிவில் இல்லை.

Thursday, April 3, 2008

பேரணிக்கு "மழையின் காரணமாகத் தடை!"

பேரணிக்கு "மழையின் காரணமாகத் தடை!" கலைஞரின் அரசு கண்டுபிடித்த புதிய காரணம்!

22-03-08 அன்று மாலை 4 மணிக்கு சென்னை தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பில் இந்திய அரசுக்கு எதிராக நடத்த இருந்த ஆர்ப்பாட்டத்திற்கு தி.மு.க. அரசு தடைவிதித்தது அனைவரும் அறிந்ததாகும்.

ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான ஆர்ப்பாட்டங்கள்-மாநாடுகளுக்கு தி.மு.க. அரசு தடைவிதிக்கும் போது எல்லாம் சொல்லாத புதிய காரணத்தை இப்போது கண்டுபிடித்துச் சொல்லியுள்ளது. காவல்துறை ஆணையாளர் அளித்துள்ள தடை ஆணையில் பின்வருமாறு குறிக்கப்பட்டுள்ளது.

"கடந்த இரு நாட்களாக தொடர்ந்து அதிக அளவு மழை பெய்து வருவதாலும் மேலும் வலுவான மழைபெய்ய சாத்தியக்கூறுகள் உள்ளதாலும் நகரின் சில பகுதிகளில் தண்ணீர் தேங்கி அதனால் ஏற்பட்டுள்ள போக்குவரத்துப் பிரச்னையும் மற்றும் அதன் தொடர்பால் ஏற்படும் சட்டம் ஒழுங்கு பிரச்னையை சமாளிக்க வேண்டியதாலும், மேலும் மனுதாரர் கோரியுள்ள இடம் அனுமதிக்கப்பட்ட இடமாக இருப்பினும் மேற்படி மழையின் காரணமா ஏற்பட்ட பிரச்சினையில் 22-03-08 அன்று ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதிக்க இயலாத சூழ்நிலை உள்ளது மேலும் இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத் சமூக விரோதிகள் சிலர் ஆர்ப்பாட்டத்தின் போது மறைமுகமாக ஊடுருவி சட்டம் ஒழுங்குப் பிரச்னையை ஏற்படுத்தி அதன் மூலம் பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் ஈடுபட உள்ளதாக நம்பத்தகுந்த தகவல் உள்ளது எனவே மேற்கூறிய காரணங்களால் மனுதாரர் 22-03-08 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரியுள்ள மனுவானது நிராகரிக்கப்படுகிறது."

மழையை காரணமாக காட்டி ஒரு ஆர்ப்பாட்டத்திற்கு தடைவிதிக்கப்படுவது உலகிலேயே இதுதான் முதன்முறையாகும். மழைபெய்தால் ஆர்ப்பாட்டம் நடத்துவோர் தாமாகவே முன்வந்து அதை ஒத்திவைப்பதுதான் வழக்கம். ஆனால் கருணையே வடிவமான கலைஞரின் அரசு தமிழீழ விடுதலை ஆதரவாளர்கள் மழையில் நனைந்துவிடக்கூடது என அதிகமான அக்கரையை எடுத்துக்கொண்டு அவர்களின் நலன்காக்க தடைவிதித்துள்ளது.

மழைக் காலத்தில் மழை காரணமா தடை, இனி வெயில் காலத்தில் வெயிலின் காரணமாகத் தடை, பனிக்காலத்தில் பனிகாரமாகத் தடை, இனி வெயிலோ, மழையோ, பனியோ இல்லாத காலத்தில்தான் நாம் நிகழ்ச்சிகள் நடத்தவேண்டியிருக்கும். அரசியல் கட்சிகள் கூட்டங்கள், நிகழ்ச்சிகள் நடத்தும்போது அதற்குரிய பாதுகாப்பு கொடுப்பது காவல்துறையினரின் நீங்காத கடமையாகும். ஆனால் சென்னை மாநகர காவல்துறையோ சமூக விரோதிகளின் ஊடுருவலை தன்னால் தடுக்க முடியாது என்பதை வெளிப்படையாகவே ஒப்புக்கொண்டு அதன் காரணமாக ஆர்ப்பாட்டத்திற்கு தடைவிதித்துள்ளது.

நல்ல அரசு! நல்ல காவல் துறை!!