Monday, March 3, 2008

இன்று கொசோவா நாளை தமிழீழம் - பழ. நெடுமாறன்

இரண்டாம் உலகப்போர் முடிவடைந்த பிறகு 1946ஆம் ஆண்டில் ஆறுதேசிய இனங்கள் ஒன்று சேர்ந்து யூகோசுலேவியா குடியரசு உருவாக்கப்பட்டது. இந்நாடுகளை ஆக்கிரமித்து இருந்த செர்மானிய இராணுவத்தை எதிர்த்து மக்களைத் திரட்டிப் போராடிய மார்சல் டிட்டோவின் முயற்சியினால் யூகோசுலேவியா பிறந்தது என்றுதான் சொல்லவேண்டும். அவரது ஆளுமையின் விளைவாக இந்நாடு உருவாக்கப்பட்டாலும் இந்த ஆறு தேசிய இனங்களின் உணர்வுகள் மங்கிவிடவில்லை. மார்சல் டிட்டோ மரணத்திற்குப் பிறகு ஒவ்வொரு தேசிய இனமும் தங்களது தனித்தன்மையையும் இறைமையையும் நிலைநாட்ட முயன்று வெற்றி பெற்றன.

1991ஆம் ஆண்டில் சுலோவேனியா, மாசிடோனியா, குரேசியா ஆகியவை தனி நாடுகளாகத் தங்களை அறிவித்துக்கொண்டு யூகோசுலேவியா குடியரசிலிருந்து பிரிந்து சென்றன.

1992ம் ஆண்டு போசுனியா விடுதலை முழக்கம் செய்தது. எஞ்சிய செர்பியா, மான்டோனக்ராஆகியவை மடடுமே யூகோசுலேவியாவில் நீடித்தன. ஆனால் 2008ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் செர்பியாவிலிருந்து கொசோவா பிரிந்து தன்னைத் தனி நாடாக அறிவித்துக் கொண்டது.

இதற்கு முன்னோடியான வரலாற்றினை நாம் அறிந்து கொள்ள வேண்டும். 1913ஆம் ஆண்டில் அல்பேனிய மக்களைப் பெரும்பாலும் கொண்ட கொசோவா செர்பியாவுடன் இணைக்கப்பட்டது. செர்பியர்கள் செர்பியன் மொழியைப் பேசும் தனி தேசிய இனத்தவர். மதத்தால் கிறித்தவர்கள். கொசோவாவில் வாழும் மக்களில் பெரும்பாலோர் அல்பேனியன் மொழி பேசுபவர்கள். மதத்தால் முசுலிம்கள். எனவே, செர்பிய தேசிய இன மக்களுக்கும் அல்பேனிய தேசிய இன மக்களுக்குமிடையே மோதல்கள் வெடித்தன. செர்பிய நாட்டிற்குள் தன்னாட்சி அதிகாரம் படைத்த ஒரு மாநிலமாக கொசோவோ விளங்கியது. ஆனால் செர்பிய அரசு அந்த தன்னாட்சி அதிகாரத்தை இரத்து செய்தது. தங்கள் உரிமை மறுக்கப் பட்டதைக் கண்டித்து கொசோவோ மக்கள் போராடினார்கள். செர்பிய இராணுவம் கொசோவா மக்களைத் திட்டமிட்ட இனப்படுகொலைக்கு ஆளாக்கியது. சுமார் 10 ஆயிரம் மக்கள் படுகொலை செய்யப்பட்டதாகச் செய்திகள் கூறுகின்றன.

1999ஆம் ஆண்டில் இந்த படுகொலைக்கு எதிராக உலக நாடுகள் தலையிட்டன. செர்பிய அரசு நிர்வாகத்திலிருந்து கொசோவா விடுவிக்கப்பட்டு ஐ.நா.வின் நேரடி நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது.

ஐ.நா. போர்க் குற்றவாளிகள் நீதிமன்றம் செர்பிய குடியரசுத் தலைவர் சுலோபோடான் மிலேசெவிக் மீது திட்டமிட்ட இனப்படுகொலை நடத்தியதாகக் குற்றம் சாட்டியது.

1999ஆம் ஆண்டு ஐ.நா. பாதுகாப்புக் குழுவின் தீர்மானம் 1244இன் கீழ் கொசோவா ஐ.நா.வின் கீழ் பாதுகாப்புக்கு உட்பட்ட ஒரு பகுதி என அறிவிக்கப்பட்டது. எனவே, கொசோவாவின் விடுதலைப் பிரகடனம் என்பது ஏற்கப்பட முடியாதது என செர்பியாவும் மற்றும் சில நாடுகளும் கூறுகின்ற வாதத்தில் எத்தகைய சத்தும் இல்லை. கொசோவா பிரச்சனை குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட சர்வதேச ஆணைக்குழு அங்கு நேடோ படைகள் தலையிட்டது சட்ட விரோதமானது என்று கூறியது. ஆனால் மிலோசேவிக் ஆட்சியின்போது பெருமளவில் கொசோவா மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இனப்படு கொலைகளையும் அட்டுழியங்களையும் தடுத்து நிறுத்தி ஐ.நா. பாதுகாப்புக் குழு தலையிட்டது சர்வதேச சட்டப்படி சரியானதே என்றும் அரசியல் சட்ட அறிஞர்கள் கருதுகிறார்கள்.

கொசோவாவின் விடுதலை அறிவிப்பிற்கு அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியத்திலுள்ள பிரிட்டன், பிரான்சு, செர்மனி, இத்தாலி ஆகிய நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. ஆனால் அதே வேளையில் ஸ்பெயின், கிரீசு, பல்கேரியா, உருசியா, சீனா, பிலிப்பைன்சு போன்ற நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.


ஸ்பெயின் நாட்டிலுள்ள லொகடேனியா பகுதி மக்கள் தனி நாடு கேட்டுப் போராடி வருகிறார்கள். அதைப்போல தெற்கு பிலிப்பைன்சில் வாழும் முப்பது இலட்சத்திற்கு மேற்பட்ட இசுலாமியர்கள் விடுதலைக்காகப் போராடி வருகிறார்கள். கிரீசு, சைப்ரசு போன்ற நாடுகளிலும் தேசிய இனப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. உருசியாவிலுள்ள சிறுபான்மை தேசிய இனங்களும் போராடி வருகின்றன. சீனாவிலுள்ள மங்கோலியர்கள், திபெத்தியர்கள் ஆகியோரும் தங்கள் தனித்தன்மையை நிலைநிறுத்தப் போராடி வருகிறார்கள். ஆகவே, தங்கள் நாடுகளில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் தேசிய இனப் போராட்டங்களை கொசோவா விடுதலை முழக்கம் விரைவுபடுத்தி விடும். எனவே, அதை அங்கீகரிக்க இந்த நாடுகள் மறுத்து வருகின்றன.

இதற்கிடையில் ஐ.நா. பேரவையின் பொதுச்செயலாளா பான்-கீ-மூன் பின்வருமாறு அறிவித்துள்ளார். "கொசோவா தனி நாடு அறிவிப்பு சட்டவகையில் சரியானதா அல்ல தவறானதா என்பதை என்னால் கூற இயலாது. ஆனால் கொசோவா நாட்டின் அறிவிப்பை உலக நாடுகள் பல வரவேற்று உள்ளன. செர்பிய அதிபரிடம் அமைதி காக்கும் படியும், எந்தவிதமான வேண்டாத நிகழ்வுகள் நடக்காத வண்ணம் பார்த்துக்கொள்ளும்படியும் வேண்டிக் கொண்டுள்ளேன். கொசோவா நாட்டுக்கு முழு ஆதரவினை ஐ.நா. வழங்கும் கொசோவாவின் அறிவிப்பு குறித்து ஐ.நா. பாதுகாப்புக் குழு விரைவில் ஆய்வு செய்யும்."

இந்தியாவின் நிலைப்பாடு

இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்சி மற்றும் பிரேசில் நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் செல்சோ அமோலைன் ஆகியோர் பிப்ரவரி இருபதாம் தேதியன்று வெளியிட்ட கூட்டறிக்கையில் "செர்பியாவிலிருந்து பிரிந்து கொசோவா தனி நாடாக அறிவித் துக் கொண்டதை ஏற்றுக்கொள்கிறோம். அதே வேளையில், அதிலுள்ள சட்டச் சிக்கல்கள் மற்றும் விளைவுகள் குறித்து ஆய்வு செய்து வருகிறோம்" என்று அறிவித்துள்ளனர். இந்தியாவின் இந்த அறிவிப்பு பிற ஆசிய நாடுகளையும் கொசோவாவை ஏற்கும்படி தூண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிங்களர் எதிர்ப்பு

ஆனால் கொசோவா மக்களின் விடுதலைப் பிரகடனத்தைக் கண்டு சிங்கள அரசு நடுக்கம் அடைந்துள்ளது. இது குறித்து அந்த அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளது: "கொசோவா தன்னிச்சையாக வெளியிட்டுள்ள விடுதலைப் பிரகடனம் சமாளிக்க முடியாத அளவுக்கு சர்வதேச உறவுகளில் நெருக்கடியை ஏற்படுத்தும். பல்வேறு நாடுகளில் இறையாண்மைக்கு இந்த பிரகடனம் அறைகூவல் விடுத்துள்ளது. இதன் மூலம் உலக அமைதிக்கும் பாதுாப்புக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. மேலும் செர்பிய நாட்டின் பெரும்பான்மை மக்களின் ஒப்புதல் இல்லாமல் கொசோவா தனிநாடு பிரகடனம் செய்து இருப்பதை நாங்கள் கண்டிக்கிறோம்."

சிங்கள அரசின் இந்த அறிவிப்பு பெரும் நகைப்புக்கிடமானது. ஒரு நாட்டிலுள்ள பெரும்பான்மை தேசிய இனத்தைச் சேர்ந்தவர்களின் சம்மதம் இல்லாமல் அந்நாட்டில் வாழும் சிறுபான்மை தேசிய இனத்தவர் பிரிந்து செல்லக் கூடாது என்ற புதிய தத்துவத்தைச் சிங்கள அரசு வெளியிட்டுள்ளது. பெரும்பான்மை தேசிய இனத்தின் மேலாதிக்கப் போக்குக்கு எதிராகத்தான் சிறுபான்மை தேசிய இனம் விடுதலை பெறப்போராடுகிறது என்ற அடிப்படை உண்மையைக்கூட உணராமல் சிங்களர் உள்ளனர்.

இந்த தத்துவத்தின்படி பார்த்தால் இந்தியாவில் உள்ள பெரும்பான்மை இந்துக்களின் ஒப்புதல் இல்லாமல் பாகிசுதான் தனி நாடானது தவறு என்று ஆகிவிடும். அதைப் போல பாகிசுதானில் வாழும் பெரும்பான்மை மக்களின் சம்மதம் இல்லாமல் வங்காள தேச மக்கள் பிரிந்து சென்றதும் தவறு என்று ஆகிவிடும். அதுமட்டுமல்ல 1983ஆம் ஆண்டில் சைப்ரசு நாட்டின் வட பகுதியில் வாழ்ந்த துருக்கி இனத்தவர் அந்நாட்டின் பெரும்பான்மை இனத்தவரான கிரேக்க இனத்தைச் சேர்ந்தவர்களின் சம்மதம் இல்லாமல் பிரிந்து சென்றதும் தவறாகிவிடும். 1993ஆம் ஆண்டு எத்தியோப்பியாவிலிருந்து எரித்திரியா பிரிந்து சென்றதும் இதன் அடிப்படையில் தவறாகிவிடும். 2002ஆம் ஆண்டில் இந்தோனேசியாவிலிருந்து கிழக்கு தைமூர் பிரிந்து சென்றதும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாததாகிவிடும். இத்தகைய அபத்தமான வாதத்தைச் சிங்கள அரசு முன்வைப்பதற்கு அடிப்படைக் காரணமே கொசோவாவின் விடுதலைப் பிரகடனம் தமிழீழத்தின் விடுதலைப் பிரகடனத்திற்கு முன்மாதிரியாக ஆகிவிடக்கூடாது என்ற பதற்றமே ஆகும்.

கொசோவாவில் வாழும் அல்பேனிய மக்கள் தனித் தேசிய இனம் என்பதை உலகறியச் செய்துள்ளனர். ஐ.நா. அதை ஏற்றுக்கொண்டுள்ளது. அதைப்போல இலங்கை வடக்கு-கிழக்குப் பகுதியில் வாழும் தமிழர்கள் தனித் தேசிய இனத்தவர் என்பது எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மையாகும். எனவே தான் சிங்கள தேசிய இனத்தவரும் தமிழ்த் தேசிய இனத்தவரும் கூடிப்பேசி இந்த பிரச்சனையை அமைதியான முறையில் தீர்த்துக் கொள்ள வேண்டும் என இந்தியா உட்பட உலக நாடுகள் பலவும் வலியுறுத்தி வருகின்றன. சிங்களரும் தமிழரும் தனித்தனி தேசிய இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை இந்நாடுகள் உணர்ந்து இருந்த காரணத்தினாலேயே மேற்கண்டவாறு வலியுறுத்தி வருகின்றன. உலகம் பூராவிலும் அந்தந்த தேசிய இன மக்கள் தங்களுக்கு என்று ஒரு நாட்டையும் இறைமையும் உள்ள அரசையும் அமைத்துகொள்வதை ஐ.நா. பிரகடனமே வரவேற்கிறது. இந்த சூழ்நிலையில் கொசோவா மக்களின் தனி நாடு பிரகடனம் என்பது ஐ.நா. பட்டயத்தில் கூறப்பட்டுள்ளதற்கு ஏற்றதே ஆகும். அமெரிக்கா, பிரிட்டன், பிரான்சு, செர்மனி, இந்தியா போன்ற நாடுகள் இதை ஏற்றுக் கொண்டிருப்பதற்கும் இதுவே அடிப்படைக் காரணமாகும். எனவே இன்று கொசோவா நாளை தமிழீழம் என்ற நிலை வந்துவிடக்கூடாது என்பதற்காகவே சிங்களப் பேரினவாத அரசு இதற்கு எதிராகப் புலம்புகிறது.

அரசியலில் இரட்டை அணுகுமுறைகளும் நேர்மாறன கொள்கைகளும் உள்ளன என்பது வெளிப்பட்டு உள்ளது. கொசோவாவில் விடுதலைப் பிரகடனத்திற்கு ஆதரவாகக் குரல் கொடுத்துள்ள அமெரிக்கா, பிரிட்டன், பிரான்சு, செர்மனி, இந்தியா போன்ற நாடுகள் அதைப்போன்ற தமிழீழப் பிரச்சனையில் எதிர்மாறான கொள்கையைக் கொண்டுள்ளன என்பது ஏன்? கொசோவாவுக்குச் சுதந்திரம் வழங்கப்படுவதன் மூலமே அந்த பகுதியில் அமைதியை நிலைநாட்ட முடியும் என்ற யதார்த்தமான உண்மையை அமெரிக்கா முதலான நாடுகள் உணர்ந்து இருப்பதன் விளைவாகவே அதற்கு அங்கீகாரம் தர முன்வந்துள்ளன.

அதைப் போலவே, இந்துமாக்கடல் பகுதியில் அமைதி நிலவ வேண்டுமானால் அதற்கு தமிழீழ விடுதலையை அங்கீகரிப்பதன் மூலமே அது சாத்தியம் ஆகும் என்பதை உலக நாடுகள் உணரவேண்டும். எனவே, சிங்கள இராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடைபெறும் போரில் அமெரிக்கா, பிரிட்டன், சீனா, பாகிசுதான் போன்ற நாடுகள் ஒரு சார்பான நிலை எடுத்து சிங்களப் பேரினவாதப் போக்கினை ஊக்குவிக்கும் வகையில் அந்த அரசுக்கு ஆயுதங்களை யும் பணத்தையும் அள்ளி அள்ளித் தருகின்றன. இந்துமாக்கடல் பகுதியில் ஆயுதங்கள் குவிக்கப்படுவதையும் இராணுவ ரீதியான தலையீடுகளையும் எதிர்க்க வேண்டிய இந்திய அரசு வாய்மூடி மெளனம் சாதிப்பது மட்டுமல்ல போட்டி போட்டிக்கொண்டு சிங்கள பேரினவாத அரசுக்கு ஆயுத உதவிகளை அளித்திருக்கிறது. சின்னஞ்சிறிய நாடான இலங்கையில் ஆயுதங்கள் குவிக்கப்படுவது இந்தியாவின் பாதுகாப்புக்கு ஆபத்து மட்டுமல்ல இந்துமாக் கடல் பகுதியையே இராணுவ மோதல்களுக்குரிய களமாக மாற்றிவிடும். அப்பகுதியில் அமைதி சீர்குலையும். இந்த உண்மையை அமெரிக்க முதலிய நாடு களும் இந்தியாவும் எண்ணிப் பார்க்க வேண்டும். எண்ணிப் பார்க்கத் தவறுவார் களேயானால் இந்துமாக்கடல் பகுதி போர்க்களமாக மாறும் என்பதில் ஐயமில்லை.


விடுதலைப் புலிகளைப் பொறுத்த வரையில் அவர்களுக்கு பொறுப்புணர்வும் தொலைநோக்கப் பார்வையும் அதிகம் இருக்கிற காரணத்தினால் இந்தியாவுக்கு எதிரான நாடுளிடம் எந்த உதவிகளும் பெறவிரும்பவில்லை. அப்படிப் பெறுவதன் மூலம் இந்தியாவுக்கு அறைகூவல் விடுக்கவும் அவர்கள் முயலவில்லை. ஆனால் சிங்கள அரசு இந்தியாவுக்கு எதிரான நாடுகளிடம் ஆயுத உதவி உள்ளிட்ட எல்லாவகை உதவிகளையும் பெற்றுக்கொள்கிறது. இந்தியாவின் பகைவர்கள் தனக்கு நண்பர்கள் என சிங்கள அரசு கருதுகிறது. தன்னை அடித்தளமாகக் கொண்ட இந்துமாக்கடல் பகுதியைப் போராட்டக்களமாக்க மேற்கு நாடுகளும் சீனா, பாகிசுதான் போன்ற நாடுகளும் முயல்கின்றன என்பது நன்கு தெரிந்தே சிங்கள அரசு அவர்களுடன் கரம் கோத்து நிற்கிறது. இந்த நிலைப்பாடு என்பது இறுதியில் இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாடாக மாறும் என்பது சிங்கள அரசுக்கு தெரியாமல் இல்லை. ஆனால் அதே வேளையில் இந்தியாவுக்கு எதிரான நாடுகள் எதனிடமிருந்தும் ஆயுத உதவி உள்பட எந்த உதவியும் பெறுவதற்கு முயலுவதற்கோ அல்லது அது குறித்து எண்ணிப் பார்க்கக் கூட இதுவரை புலிகள் முன்வரவில்லை என்பது குறிப்பிடத் தக்கதாகும். இத்தகைய உதவிகளைப் பெறுவது எதிர்காலத்தில் இந்தியாவுக்கு எதிரான போராட்டத்தில் தங்களை இறக்கிவிட்டுவிடும் என்பதையும் இந்துமாக்கடல் பகுதி அன்னிய அரசு களின் போராட்டக்களம் ஆக்கப்பட்டு விடும் என்பதையும் அவர்கள் தெளிவாக உணர்ந்திருக்கிறார்கள். எனவே தான் அவர்கள் தங்கள் வலிமையையும் உலகத் தமிழர்களின் உதவியையும், ஆதரவை யும் மட்டுமே நம்பிப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இந்த உண்மையை எவ்வளவு விரைவில் இந்தியா உணருகிறதோ அவ்வளவுக்கு நல்லது. இல்லையென்றால் வேண்டாத விளைவுகள் ஏற்படுவதை யாராலும் தடுக்க முடியாது. கொசோவா விடுதலைப் பிரகடனத்தை மேற்கு நாடுகள் ஆதரிக்க முன்வந்திருப்பதன் அடிப்படையே ஐரோப்பாவில் மீண்டும் ஒரு போர் சூழல் ஏற்படக்கூடாது என்பதற்காகத்தான். இதே அடிப்படை தமிழீழத்திற்கும் பொருந்தும்.