Thursday, January 1, 2009

திசை திருப்புபவர்களின் வலையில் விழாதீர் - பழ. நெடுமாறன் வேண்டுகோள்


இலங்கையில் உடனடியாகப் போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும், இலங்கை அரசுக்கு இந்திய அரசு இராணுவ ரீதியான உதவிகள் அளிக்கக் கூடாது ஆகிய இரு முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தித் தமிழகத்தில் ஒன்றுபட்ட போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்தப் போராட்டங்களைச் சீர்குலைக்கும் வகையிலும் பிரச்னையைத் திசை திருப்பவும் தமிழகக் காங்கிரசுக் கட்சியைச் சேர்ந்த சிலர் செயல்பட்டு வருகின்றனர். தமிழகமே ஒன்றுபட்டு நிற்கும்போது இவர்கள் வேண்டுமென்றே திட்டமிட்டு சிங்கள அரசுக்கு ஆதரவான போக்கில் நடந்து கொள்வதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

ஈழத் தமிழர்களின் துயரைத் துடைப்பதற்காக மக்களைத் திரட்டும் பணியில் ஈடுபட்டிருக்கக் கூடிய பல தலைவர்களைக் கைது செய்ய வேண்டுமென இவர்கள் கூக்குரல் இடுகின்றனர்.

இந்திய அரசியல் சட்டம் வழங்கியிருக்கும் பேச்சுரிமை, கருத்துரிமை ஆகியவற்றை பறிக்கும் வகையில் செயல்படும் இவர்களின் அநீதியான கோரிக்கைக்கு தமிழக அரசு பணிந்து பல தலைவர்களை கைது செய்து சிறையில் அடைத்திருப்பது அப்பட்டமான ஜனநாயக உரிமைகள் மீறலாகும்.

ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் திரண்டு வரும் உணர்வை மேலும் மேலும் பெருக்கி அதன் மூலம் இந்திய அரசுக்கும் தமிழக அரசுக்கும் நிர்ப்பந்தங்களை உருவாக்கி சரியான வழியில் செயல்பட வைப்பதே நமது முக்கிய நோக்கம் என்பதை உணர்ந்து நாம் செயல்பட்டாக வேண்டும். பிரச்னையை திசை திருப்பி நமக்கு ஆத்திரமூட்டி குழப்புவதற்கு முயற்சி செய்பவர்களின் வலையில் நாம் விழுந்து விடக் கூடாது. தமிழர்களை ஒன்று திரட்டும் பணியில் முழு மூச்சுடன் செயல்படுமாறு அனைவரையும் வேண்டிக் கொள்கிறேன்.

Monday, December 8, 2008

தகவல் தொழில்நுட்பத் துறை இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் நடத்தும் ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டம்!

இலங்கையில் தமிழர்களுக்கெதிரான இனப்படுகொலைகளை நிறுத்தக் கோரி தகவல் தொழில்நுட்பத் துறை இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் நடத்தும் ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டம்!

  • OMR சாலையில் டபுள் பெட்ரூம் பிளாட் வாங்குவது பற்றி திட்டமிடுகிறோம் நாம். மேலிருந்து விழும் குண்டுகளிலிருந்து தங்களைக் காத்துக் கொள்வதற்காக குடிசைகளிலிருந்து வெளியேறி காடுகளில் தஞ்சம் புகுகிறார்கள் அவர்கள்.
  • இரவு கொசுக்கடியிலிருந்து தப்பிக்க என்ன வழி என்று யோசித்துக் கொண்டிருக்கிறோம் நாம். பகலில் கடிக்க வரும் பாம்புகளிலிருந்து தப்பிக்கும் வழியறியாது அடர்ந்த வனங்களில் தினமும் இறக்கிறார்கள் அவர்கள்.
  • அடுத்த வேளை உணவு, KFC Chicken- அல்லது Pizza Hut- என்று நண்பர்களுடன் பேசுகிறோம் நாம். நாளைக்காவது ஒரு வேளை உணவு கிடைக்குமா என்று சொந்த நாட்டில் அகதிகளாகத் தவிக்கிறார்கள் அவர்கள்.
  • பொங்கலுக்கு ஊருக்குப் போக இரண்டு மாதங்களுக்கு முன்பே online reservation செய்கிறோம் நாம். எப்போது தாய்நாடு போவோம் என்பது குறித்து யாதொரு நம்பிக்கையுமின்றி அகதிகளாக உலகெங்கும் சிதறிக் கிடக்கிறார்கள் அவர்கள்.
  • சத்யம் சினிமா, MGM ரிசார்ட், சனிக்கிழமை இரவுக் கொண்டாட்டங்கள் என சுகமாய் வாழ்கிறோம் நாம். ஒவ்வொரு நொடியைக் கழிப்பதும் போராட்டமாய் வாழ்கிறார்கள் அவர்கள்.
  • நாமும் தமிழர்கள், அவர்களும் தமிழர்கள் எனில், அவர்களுக்காக என்ன செய்யப் போகிறோம் நாம்?
செய்ய வேண்டியது ஆயிரம் இருப்பினும், சிங்கள பேரினவாத அரசுக்கு எதிரான நமது எதிர்ப்பை, ஈழத்தமிழர்களுக்கான நமது ஆதரவைத் தெரிவிக்க ஒரு நாள் உண்ணாவிரதம் இருப்போம், வாருங்கள் நண்பர்களே!

நாள்: 13-டிசம்பர்-2008, சனிக்கிழமை
நேரம்: காலை 09:00 - மாலை 06:00
இடம்: Auto garage (பழ.நெடுமாறன் உண்ணாவிரதம் இருந்த இடம்),
Near first signal on the way Koyembedu bus stand to anna nagar, Koyembedu

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு:
தகவல் தொழில்நுட்பத் துறை இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள்.

Sunday, December 7, 2008

எங்களுக்காக வாழ்க! - பேரா. அறிவரசன்

உலகம் முழுவதும் வாழ்கின்ற
ஒன்பது கோடித் தமிழர்க்கு
நிலமொன் றில்லை; உரிமையுடன்
நிமிர்ந்து வாழவோர் நாடில்லை
பலரும் தமிழரை அடிமையராய்ப்
பார்க்கும் அவலம் தீர்ப்பதற்கு
வலுவுடன் எழுந்து போர் உடற்றும்
மாண்புசேர் தலைவ! வாழியவே!















ஆற்றல் மறவ! அருந்தலைவ!
அன்னைத் தமிழை அரவணைத்துப்
போற்றிக் காத்து வளர்க்கின்ற
புகழ்ப் பிர பாகரப் பெரியோய்! உன்
ஏற்றம் அறிவோம்; பகையிருளை
எற்றித் தள்ளித் தமிழ்ஈழ
நாட்டைத் தருவாய் விராவாக
நல்வோய்! பல்லாண்டு வாழியவே!

வீரம் விளையும் ஈழத்தில்
வேற்றுச் சிங்களர் தமையகற்றிச்
சீரும் சிறப்பும் தமிழர்க்குச்
சேர்த்திட விரும்பி ஆர்த்தெழுந்து
போரினை நடாத்தும் புலிப்படையின்
புகழ்மேம் பட்ட தமிழ்த்தலைவ!
பாரிய வளமுடன் நலம்பெற்றுப்
பல்லாண்டு வாழிய! வாழியவே!

வெல்லுந் திறத்தால் சிறந்தவனே!
வேலுப் பிள்ளை பார்வதித்தாய்
செல்வனாய்ப் பிறந்து தமிழீழத்
தேசியத் தலைவராய் உயர்ந்தவனே!
நல்ல தமிழினம் உரிமையுள
நாட்டை அமைத்திட உழைப்பவனே!
பல்வகைச் சிறப்பும் நீபெற்றுப்
பல்லாண்டு பல்லாண்டு வாழியவே!

கார்த்திகைத் திங்களில் நீ பிறந்தாய்
காரிருள் நீக்கிட நீ வளர்ந்தாய்
போர்த்திறத் தால்தமிழ் இனம்காக்கும்
பொருவிலாத் தலைவனாய் வடிவெடுத்தாய்
தீத்தகைச் சிங்களர் தமைவென்று
செந்தமிழ் ஈழத்தை நீசமைப்பாய்
ஏத்துகி றோம்உனை எம்தலைவ!
இனும்நூ றாண்டுகள் வாழியவே!

தம்பியாய் இருந்தாய்; இன்றெமக்குத்
தலைவராய் உயர்ந்தாய்; உன்திறத்தால்
எந்தமிழ் ஈழ விடுதலையை
எமக்குநீ தருவாய் என்றுனையே
நம்பியே நிற்கிறோம்; ஐ. நா - வில்
நாளை தமிழ்க்கொடி நாட்டிடுவோம்
பைந்தமிழ்த் தலைவ! நனிசிறந்து
பல்லாண்டு பல்லாண்டு வாழியவே!

பிரபா கரனே! தமிழர்க்குப்
பெருமை சேர்க்க வந்தவனே!
அறிவால் உயர்ந்தோய்! பகையழிக்கும்
ஆற்றலில் சிறந்தோய்! விடுதலையே
குறியாய்க் கொண்டு களங்களிலே
கொற்றம் விளைக்கும் கொற்றவனே!
நிறைவாய் நலங்கள் பலபெற்று
நெடியபல் லாண்டுகள் வாழியவே!

ஞாலம் முழுதும் வாழ்கின்ற
நந்தமி ழர்க்கொரு நற்றுணையே!
ஆளும் உரிமை தமிழர்க்கே
ஆக்கிட உழக்கும் ஆற்றலனே!
சூழும் பகையிருள் தனைவிரட்டும்
சுடர்மிகு பிரபா கரனே! உன்
தோளின் வலிமையால் எமைக்காக்கத்
தூயவ! பல்லாண்டு வாழியவே!

ஐம்பத் தைந்தாம் அகவையிலே
அடிவைத் தெழுந்து நிற்கின்ற
எங்கள் தலைவ! இருபதுசேர்
இளைஞன் போல நெஞ்சுரத்தால்
பொங்கித் தளும்பும் உன்வீரம்
போற்றிப் பலநூ றாண்டுகள்நீ
எங்களுக் காக வாழ்கவென

Saturday, November 15, 2008

இது மென்பொருள் பொறியாளர்களின் தருணம்!

Thursday, October 16, 2008

ஜெயலலிதாவுக்குக் கண்டனம் பழ. நெடுமாறன் அறிக்கை

இலங்கையில் நடைபெற்று வரும் போரை நிறுத்த வேண்டுமென்று கேட்பதன் மூலம் புலிகள் அமைப்பைக் காப்பாற்றுவதற்கான முயற்சியில் முதல்வர் கருணாநிதி ஈடுபட்டிருப்பதாக அ.தி.முக. பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

ஈழத் தமிழர்கள் மீது குண்டு மழை பொழிந்து சிங்கள இராணுவம் நடத்தி வரும் கொடிய போரை உடனடியாக நிறுத்தி அப்பாவி மக்களைக் காப்பாற்ற வேண்டுமென அனைத்துக் கட்சிகளும் இணைந்து கூட்டாகத் தீர்மானம் நிறைவேற்றியுள்ள நிலையில், அதைத் திசைத் திருப்பும் வகையில் முதல்வரை மட்டுமே பிரித்துக் குற்றம் சாட்டுவது என்பது உள்நோக்கம் கொண்டதாகும்.

தங்கள் மக்களையும் தங்களையும் காப்பாற்றிக் கொள்ள விடுதலைப் புலிகளுக்கு வலிமை உண்டு என்பதை ஜெயலலிதா உணர வேண்டும். உலக நாடுகள் பலவும் சிங்கள அரசின் போர் வெறியைக் கண்டித்துள்ள வேளையில், கொஞ்சமும் மனித நேய உணர்வின்றி சிங்கள அரசுக்கு ஆதரவாகப் பேசுவதை ஜெயலலிதா நிறுத்திக் கொள்ள வேண்டும்.

விடுதலைப் புலிகள் இயக்கம் தோன்றுவதற்கு முன் இருந்தே தமிழர்களுக்கு எதிரான திட்டமிட்ட இனவெறிப் படுகொலைகளைச் சிங்கள வெறியர்கள் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். இவர்களிடமிருந்து தங்கள் மக்களைக் காப்பாற்றுவதக்றாகத்தான் விடுதலைப் புலிகள் ஆயுதம் ஏந்தினார்கள் என்ற வரலாற்று உண்மையைக் கூட உணராமல் ஜெயலலிதா பேசுவது வெட்கக் கேடானது.

இலங்கையின் உள்நாட்டுப் பிரச்னையில் தலையிடும் அதிகாரம் மத்திய அரசுக்கு இல்லை என ஜெயலலிதா வக்காலத்து வாங்குகிறார். பாகிஸ்தானில் உள்விவகாரத்தில் இந்திய அரசு இராணுவ ரீதியாகத் தலையிட்டு வங்க தேசம் சுதந்திர நாடாக உதவி புரிந்தது என்பதை ஜெயலலிதா உணராமல் போனது ஏன்?
இலங்கையின் உள்நாட்டுப் பிரச்னையில் தலையிட்டு சிங்கள இராணுவத்திற்கு ஆயுதங்களை அள்ளித் தந்தும் உளவுத் தகவல்களை அளித்தும் ஈழத் தமிழர்களைக் கொன்று குவிக்க உதவி புரியும் இந்திய அரசுக்கு அந்தப் போரை நிறுத்தும்படி கூற அதிகாரம் இல்லை என்று கூறுவது அறிவுக்குப் பொருந்தாத வாதமாகும்.

தமிழர்களுக்கு எதிரான இன வெறி அழிப்பை நடத்திக் கொண்டிருக்கும் இராபக்சேயின் ஊதுகுழலாக ஜெயலலிதா ஒலிக்கிறார். இரண்டு முறை முதலமைச்சராக இருந்தவர் அண்டை நாட்டில் நடைபெறும் தமிழர் படுகொலைகளைப் பற்றி எதுவும் அறிந்து கொள்ளாமல் தமிழ்ப் பகைவர்களின் கை பொம்மையாக மாறி செயல்படுவதை தமிழக மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்.

Tuesday, September 9, 2008

இந்திய அரசின் இரட்டை வேடம் அம்பலம்

தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் அமைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை


வவுனியாவில் உள்ள சிங்கள இராணுவத் தலைமையகத்தின் மீது வான் புலிகளும் கரும்புலிகளும் நடத்திய தாக்குதல்களின் விளைவாக இந்தியா வழங்கியிருந்த ராடார் கருவி முற்றிலுமாக அழிக்கப்பட்டதுடன் அதை இயக்கிய இந்திய இராணுவ அதிகாரிகள் இருவர் காயமடைந்திருப்பதாக வெளியாகியிருக்கும் செய்தி இந்திய அரசின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்திவிட்டது.

சிங்கள அரசுக்கு ஆயுத உதவி மட்டுமல்ல ஆள் உதவியையும் இந்திய அரசு செய்து வருகிறது என்பது இதன் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்திய அரசின் இந்தப் போக்கை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

இலங்கை இனப் பிரச்னைக்கு இராணுவத் தீர்வு கூடாது, பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் பல முறை கூறிவிட்டார். ஆனால் நடைமுறையில் இராணுவ ரீதியான தீர்வு காண முயலும் சிங்கள அரசுக்கு இராணுவ ரீதியான உதவிகளை இந்திய அரசு செய்து வருவது தமிழ்நாட்டு மக்களின் உள்ளங்களைக் கொதிப்படைய வைத்திருக்கிறது. இந்த தகாதப் போக்கினை உடனடியாக கைவிடுமாறு இந்திய அரசை வற்புறுத்துகிறேன்.

Thursday, August 28, 2008

கருணாநிதிக்கு பதில் - பழ. நெடுமாறன் அறிக்கை

மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் அமைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை :

அடுத்த முறை தான் முதலமைச்சராக இருக்க விரும்பவில்லை என முதல்வர் கருணாநிதி கூறியதை விமர்சித்து நான் எழுதிய கட்டுரையில் எழுப்பப்பட்ட வாதங்களுக்கு எவ்வித பதிலும் கூற திராணியின்றி தனிப்பட்ட முறையில் மிகக் கீழ்த்தரமாக வசை புராணம் பாடியிருக்கிறார். அவர் தரத்திற்கு நானும் இறங்கி பதிலடி கொடுக்க விரும்பவில்லை. எனினும் அவர் கூறியுள்ள அப்பட்டமான பொய்களுக்குப் பதில் கூற வேண்டியது அவசியம் ஆகும்.
பெருந்தலைவர் காமராசர் வாழ்ந்த காலத்திலும் அதற்குப் பிறகு இன்று வரையிலும் அவரது நினைவை நன்றியறிதலுடன் போற்றி வருபவன் நான் என்பதைத் தமிழகம் அறியும். ஆனால் காமராசருக்கு நான் துரோகம் செய்துவிட்டதாக புனைந்து கூறியிருக்கிறார் கருணாநிதி. 1969-ஆம் ஆண்டில் நாகர்கோவில் நாடாளுமன்ற தொகுதியின் இடைத் தேர்தலில் காமராசர் போட்டியிட்டபோது அவரைத் தோற்கடிக்க வரிந்து கட்டிக் கொண்டு பொய்யான பழிகளை சுமத்தியும் நாடாளுமன்றத் தொகுதியல்ல இது நாடார் மன்றத் தொகுதி என்று சாதி வெறியைக் கிளப்பியும் துரோகம் செய்தவர் கருணாநிதி.

அறிஞர் அண்ணாவால் நாட்டிற்கு அடையாளம் காட்டப்பட்ட நாவலர் நெடுஞ்செழியனுக்குத் துரோகம் செய்து பதவி நாற்காலியைக் குறுக்கு வழியில் கைப்பற்றி அண்ணாவுக்கு துரோகம் செய்தவர் கருணாநிதி.

அறியணை ஏற ஏணியாகப் பயன்பட்ட எம்.ஜி.ஆரை எட்டி உதைத்து கட்சியிலிருந்து நீக்கித் துரோகம் புரிந்தவர் கருணாநிதி.

1996-ஆம் ஆண்டு பிரதமராகும் வாய்ப்பு காவிரி மைந்தனான மூப்பனாருக்குக் கிடைத்த போது அவருக்குத் துரோகம் செய்து காவிரிப் பகைவனான தேவகவுடா பிரதமராகத் துணை நின்றவர் கருணாநிதி. இதன் மூலம் தமிழக விவசாயிகளுக்குப் பெருந்துரோகம் செய்தவர் இவரே.

1983-ஆம் ஆண்டு நான் தியாகப் பயணம் மேற்கொண்டு இலங்கைக்குப் படகில் சென்ற போது கடைசி வேளையில் கலந்து கொண்டவர் குமரி அனந்தன். நடுக்கடலில் எங்கள் படகைத் தடுத்து நிறுத்திய கடற்படையினர் என்னோடு அவரையும் கைது செய்துக் கரைக்கு கொண்டுவந்தனர். இந்த உண்மையைத் திரித்து ஏதேதோ கூறுகிறார் கருணாநிதி. பொய்யும் புனைசுருட்டும் அவருக்கே ஆகி வந்த கலை. வயது முதிர்ந்த இந்த காலத்திலாவது உண்மையைப் பேச அவர் முன்வரவேண்டும்.