Thursday, October 16, 2008

ஜெயலலிதாவுக்குக் கண்டனம் பழ. நெடுமாறன் அறிக்கை

இலங்கையில் நடைபெற்று வரும் போரை நிறுத்த வேண்டுமென்று கேட்பதன் மூலம் புலிகள் அமைப்பைக் காப்பாற்றுவதற்கான முயற்சியில் முதல்வர் கருணாநிதி ஈடுபட்டிருப்பதாக அ.தி.முக. பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

ஈழத் தமிழர்கள் மீது குண்டு மழை பொழிந்து சிங்கள இராணுவம் நடத்தி வரும் கொடிய போரை உடனடியாக நிறுத்தி அப்பாவி மக்களைக் காப்பாற்ற வேண்டுமென அனைத்துக் கட்சிகளும் இணைந்து கூட்டாகத் தீர்மானம் நிறைவேற்றியுள்ள நிலையில், அதைத் திசைத் திருப்பும் வகையில் முதல்வரை மட்டுமே பிரித்துக் குற்றம் சாட்டுவது என்பது உள்நோக்கம் கொண்டதாகும்.

தங்கள் மக்களையும் தங்களையும் காப்பாற்றிக் கொள்ள விடுதலைப் புலிகளுக்கு வலிமை உண்டு என்பதை ஜெயலலிதா உணர வேண்டும். உலக நாடுகள் பலவும் சிங்கள அரசின் போர் வெறியைக் கண்டித்துள்ள வேளையில், கொஞ்சமும் மனித நேய உணர்வின்றி சிங்கள அரசுக்கு ஆதரவாகப் பேசுவதை ஜெயலலிதா நிறுத்திக் கொள்ள வேண்டும்.

விடுதலைப் புலிகள் இயக்கம் தோன்றுவதற்கு முன் இருந்தே தமிழர்களுக்கு எதிரான திட்டமிட்ட இனவெறிப் படுகொலைகளைச் சிங்கள வெறியர்கள் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். இவர்களிடமிருந்து தங்கள் மக்களைக் காப்பாற்றுவதக்றாகத்தான் விடுதலைப் புலிகள் ஆயுதம் ஏந்தினார்கள் என்ற வரலாற்று உண்மையைக் கூட உணராமல் ஜெயலலிதா பேசுவது வெட்கக் கேடானது.

இலங்கையின் உள்நாட்டுப் பிரச்னையில் தலையிடும் அதிகாரம் மத்திய அரசுக்கு இல்லை என ஜெயலலிதா வக்காலத்து வாங்குகிறார். பாகிஸ்தானில் உள்விவகாரத்தில் இந்திய அரசு இராணுவ ரீதியாகத் தலையிட்டு வங்க தேசம் சுதந்திர நாடாக உதவி புரிந்தது என்பதை ஜெயலலிதா உணராமல் போனது ஏன்?
இலங்கையின் உள்நாட்டுப் பிரச்னையில் தலையிட்டு சிங்கள இராணுவத்திற்கு ஆயுதங்களை அள்ளித் தந்தும் உளவுத் தகவல்களை அளித்தும் ஈழத் தமிழர்களைக் கொன்று குவிக்க உதவி புரியும் இந்திய அரசுக்கு அந்தப் போரை நிறுத்தும்படி கூற அதிகாரம் இல்லை என்று கூறுவது அறிவுக்குப் பொருந்தாத வாதமாகும்.

தமிழர்களுக்கு எதிரான இன வெறி அழிப்பை நடத்திக் கொண்டிருக்கும் இராபக்சேயின் ஊதுகுழலாக ஜெயலலிதா ஒலிக்கிறார். இரண்டு முறை முதலமைச்சராக இருந்தவர் அண்டை நாட்டில் நடைபெறும் தமிழர் படுகொலைகளைப் பற்றி எதுவும் அறிந்து கொள்ளாமல் தமிழ்ப் பகைவர்களின் கை பொம்மையாக மாறி செயல்படுவதை தமிழக மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்.

0 comments: