Tuesday, January 15, 2008

புலிகளுக்குத் தடை-ஒரு மாபெரும் தவறு

புலிகளுக்குத் தடை-ஒரு மாபெரும் தவறு
சவகர்லால் நேரு பல்கலைக் கழகப் பேராசிரியர் கருத்து

"கடந்த ஆண்டு விடுதலைப் புலிகள் இயக்கத்திற்குத் தடை விதித்ததன் மூலம் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் பெரும் தவறு செய்து விட்டன" எனத் தில்லியைச் சேர்ந்த பேராசிரியர் பி.சகாதேவன் கூறியுள்ளார்.

சவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் தென் ஆசிய ஆய்வு மையத் திற்குத் தலைவராக இவர் உள்ளார். இவர் எழுதியுள்ள கட்டுரை குறித்து கொழும்புவில் உள்ள தென் அமெரிக்க நாடு ஒன்றின் தூதுவர் ஒருவர் பின்வருமாறு கூறியுள்ளார்: "பேராசிரியர் சகாதேவன் வெளியிட்டுள்ள கருத்துகள் துணிகரமானது என்பது மட்டுமல்ல இந்திய பாதுகாப்புத் துறை அமைப்பு களும் மேற்கத்திய ஆய்வுக் குழுக்களும் வெளியிட்டுள்ள கருத்துகளுக்கு முற்றிலும் மாறானதுமாகும் பேராசிரியர் சகாதேவன் அவர்கள் எழுதியுள்ள கட்டுரையில் பின்வருமாறு குறிப் பிட்டுள்ளார்: நார்வே பிரதிநிதிகள் மேற் கொண்ட அமைதிக்கான முயற்சிகள் கட்டுப்படுத்தப்பட்டவையாக இருந்த காரணத்தால் முழுமையாகத் தோல்வி அடைந்து விட்டன. சர்வதேச சமூகம் முன்வந்து சிங்களருக்கும் தமிழருக்கும் இடையே சமரசம் ஏற்படுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு செய்யும் போது இலங்கையின் உள்நாட்டில் எதிர்ப்பு ஏற்படலாம். ஆனால் ஐரோப்பாவிலுள்ள சனநாயகச் சக்திகள் அதை சமாளிக்கும் திறன் பெற்றவை. விருப்பு வெறுப்பற்ற அரசி யல் ரீதியான அணுகுமுறை கடைப் பிடிக்கப்பட வேண்டும். தென் இலங்கையில் அதாவது சிங்களவர் களுக்கு நடுவே அமைதி முயற்சிக்கான கருத்தொற்றுமை உருவாக வேண்டும்.
விடுதலைப் புலிகளைக் குறித்து சர்வதேச சமூகம் சரியாகப் புரிந்து கொண்டுள்ளதா என்பது ஐயத்திற் குரியது. தமிழீழ இலட்சியத்திற்காகத் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்ட அமைப்பு அது. அதற்காகத் தன்னை முழுமையாகத் தியாகம் செய்து கொள்வதற்கும் அது துணிந்துள்ளது. விடுதலைப் புலிகளின் தலைமை எத்தகைய சமரசத்திற்கும் சுலபத்தில் பணிந்துவிடாது.


அமைதிக்கான சமரச முயற்சி யின் போது ஒரு தரப்பினரை நிர்ப்பந்தப் படுத்தலாம். ஆனால் அந்தத் தரப்பைத் தண்டிக்கக் கூடாது. அவ்வாறு செய்தால் நேர்மாறான விளைவுகள் ஏற்பட்டு விடும். விடுதலைப் புலிகளின் இயக்கத்தின் மீது ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் தடை விதித்தது சமரச முயற்சிகளைப் பலி வாங்கி விட்டது. இதன் விளைவாக சமரச முயற்சிகள் தோல்வி அடைந்து விட்டன. இந்த நடவடிக்கை தவிர்க்கக் கூடியது என ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் சில நாடுகள் கருதுகின்றன. விடுதலைப் புலிகளின் மீது வல்லரசு நாடுகள் சில மேற்கொண்ட நிர்ப்பந்த முயற்சிகள் வெற்றி பெறுவதற்கு அந்நாடுகள் கைக்கொண்ட ஒரு சார்பான அணுகுமுறையே காரணமாகும். புலிகளை நிர்ப்பந்தப்படுத்திய இந்த வல்லரசுகள் சிங்கள அரசை நிர்ப்பந்தப் படுத்துவதில் தவறிவிட்டன.
சர்வதேச சமூகம் போரில் ஈடுபட்டுள்ள இரு தரப்பினரில் யாரிடமும் ஒரு சார்பாக நடந்து கொள்வதோ அல்லது ஒருவருக்கு எதிராக மற்றொரு வருக்குச் சாதகம் காட்டுவதோ சமரச முயற்சிகளை சந்தேகத்திற்குரியதாக ஆக்கி செயல்பட முடியாததாக்கி விடும்.

"தமிழீழமும் இந்தியாவின் பாதுகாப்பும்" பேரழிவைத் தடுப்பது எப்படி?
விடுதலைப் புலிகளைத் தனிமைப்படுத்துவதும் அதற்கு எதிராக சிங்களருக்கு இராணுவ ரீதியான உதவிகளை சர்வதேச சமூகம் செய்வதும் புலிகளையும் அவர்களுக்கு ஆதரவான மக்களையும் தனிமைப்படுத்திவிடும். மேலும் புலிகளும் தமிழ் மக்களும் நிலைமையை எதிர்கொள்வதைத் தவிர வேறு வழி இல்லை என்ற நிலைக்கு ஆளாக்கிவிடும். புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் இந்தியாவின் பாதுகாப் பைக் கேள்விக்குறி ஆக்கிவிடும். இந்திய அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் நடுவே உள்ள இடைவெளி என்பது நிலைமையைச் சீராக்குவதில் பெரும் முட்டுக் கட்டையாக விளங்கும். பாக் சலசந்தியின் இரு பக்கமும் வாழும் தமிழர்களைச் சினம் கொண்ட மக்களாக மாற்றுவது இந்தியாவின் பாதுகாப்புக்கு நல்லதல்ல. 1949ஆம் ஆண்டு யாழ்ப் பாணத்திலிருந்து வெளிவந்த "இந்து சாதனம்" என்னும் தமிழ்ப் பத்திரிகை தனது வைரவிழாவைக் கொண்டாடியது. 1889ஆம் ஆண்டு ஆறுமுக நாவலரால் இந்தப் பத்திரிகை தொடங்கப்பட்டது. இந்தப் பத்திரிகையின் துணை நிறுவனமான யாழ் இந்து கல்லூரித்
திடலில் விவேகானந்தருக்கும் மகாத்மா காந்திக்கும் வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிறுவனத்தின் வைர விழாவிற்கு இந்திய இலங்கை கவர்னர் செனரல்கள் வாழ்த்து அனுப்பினார்கள். இலங்கை சுதந்திரம் பெற்று ஓராண்டிற்குப் பின் நடைபெற்ற இந்த விழாவிற்கு இந்தியா வின் கவர்னர் செனரல் வாழ்த்துச் செய்தி அனுப்பியது என்பது மிக முக்கிய மானதாகும். இலங்கைத் தமிழர்களை இந்தியா எப்படி மதிக்கிறது என்பதற்கு இது ஒரு சான்றாகும்.


இலங்கை விடுதலை பெற்ற அன்று இந்திய வம்சாவழித் தமிழர்கள் அதிகமாக இருந்தனர். இந்தியாவின் மீது மிகுந்த அனுதாபம் கொண்ட அவர்களை வலுப்படுத்துவதன் மூலம் இலங்கை அரசுக்கு நிர்ப்பந்தம் கொடுத்து இந்தியாவின் மற்றும் தென் ஆசியாவின் பாதுகாப்பு நலன்களுடன் இணைந்து செயல்படுமாறு செய்திருக்கமுடியும். ஆனால் இந்திய அரசு சிங்களத் தலைவர்களை தாசா செய்யும் நடைமுறைக்கு ஒவ்வாத வெளியுறவுக் கொள்கையைக் கடைப்பிடித்தது. அத னால் சிங்களத் தலைவர்களும் இந்தியா வைச் சந்தேகத்துடனும் வெறுப்புடனும் பார்த்தார்கள்.


1950களிலும் 1960களிலும் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை என்பது கீழ்க்கண்ட முக்கியமான அம்சங்களைக் கொண்டிருந்தது. அணிசேராக் கொள்கையும் சீனாவைக் குறித்த அணுகுமுறையுமே அவையாகும். இதற்கு இலங்கையின் ஆதரவை இந்தியா நாடியது. இதற்குப் பதிலாகத் தங்கள் தமிழர் விரோதப் போக்குக்கு இந்தியா ஆதரவு தரவேண்டும் என இலங்கைத் தலைவர்கள் வற்புறுத்தித் தங்கள் விருப்பத்தினை நிறைவேற்றிக் கொண்டனர். இதன் விளைவாக 1949ஆம் ஆண்டு இந்திய வம்சா வழியினர் குடியுரிமையை சிங்கள அரசு பறித்தது. 1956ஆம் ஆண்டு சிங்களம் மட்டுமே இலங்கையின் ஆட்சி மொழி என்ற சட்டத்தை நிறைவேற்றியது. 1983ஆம் ஆண்டில் தமிழருக்கு எதிரான இனக் கலவரத்தை நடத்தியது. 1954ஆம் ஆண்டிலும் 66ஆம் ஆண்டிலும் இந்திய வம்சாவழி மக்களை நாடு கடத்துவது என்ற ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டு இந்தியா கையெழுத்திட்டது. 1972ஆம் ஆண்டு இலங்கை சிங்கள புத்த நாடு எனப் பிரகடனம் செய்யும் அரசியல் சட்டத்தை நிறைவேற்றியது.

சிங்களத் தலைவர்களின் தாளத்திற்கு இந்தியா ஆடியது. இந்தியாவின் மீது மிகுந்த நம்பிக்கையும் அன்பும் கொண்டிருந்த இலங்கைவாழ் தமிழ் மக்களின் நலன்களைப் பலி கொடுக்க இந்தியா தயங்கவில்லை. சிங்கள மக்களின் ஆதரவைப் பெற முடியும் என்ற நம்பிக்கையுடன் தனது உண்மை யான கூட்டாளியான தமிழர்களை இந்தியா கைவிட்டது. ஆனால் சிங்களத் தலைவர்கள் ஒரு போதும் இந்தியாவுக்கு நன்றியுடன் இல்லை.

இலங்கை சீனாவுக்கு முக்கிய மான இடம் கொடுத்துக் கெளரவித்தது. வங்காள தேசத்தின் போராட்டத் தின்போது பாகிசுதான் உளவு விமானங் கள் இலங்கைக்குப் பறந்து வந்து பெட்ரோல் போட்டுக்கொள்ள இலங்கை அனுமதித்தது. இலங்கையைத் தாசா செய்யும் இந்தியாவின் கொள்கையில் 1980களின் தொடக்கத்தில் ஒரே ஒருமுறை மாற்றம் ஏற்பட்டது. பிரதமர் இந்திராகாந்தியின் காலத்தில் ஏற்பட்ட இந்த மாற்றத்திற்கு வலுவான காரணங்கள் இருந்தன.

1977ஆம் ஆண்டு இலங்கையில் செயவர்த்தனாவின் ஆட்சி நடைபெற்ற போது அவரின் வெளியுறவு மற்றும் பொருளாதாரக் கொள்கை என்பது இந்தி யாவின் நலன்களுக்கு எதிராக அமைந் தது. 1977 மற்றும் 1983ஆம் ஆண்டு களில் தமிழர்களுக்கு எதிராக நடை பெற்ற இனப் படுகொலைக்கு எதிராகத் தமிழ் இளைஞர்கள் ஆயுதம் தூக்கிய நிகழ்ச்சி கண்ட தில்லி பதட்டம் அடைந்தது. ஆரம்ப காலத்திலேயே தமிழ்ப் போராளிகளையும் சிங்கள அரசையும் கட்டுப்பாட்டில் கொண்டு வர பிரதமர் இந்திராகாந்தி முடிவு செய்தார். இலங்கையை இரு நாடுகளாகப் பிரிப்பதற்கு இந்திராகாந்தி ஒருபோதும் ஆதரவாக இல்லை. ஆனால் தமிழர்களால் ஏற்றுக் கொள்ளப் படும் அரசியல் தீர்வுக்கு இலங்கை அரசை சம்மதிக்கச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் தமிழ்ப் போராளி களுக்கு உதவ முன் வந்தார். இம்முயற்சி தோற்குமானால் ஒரு தீர்வைக் கொண்டு வர அங்கு இந்தியா தலையிடுவது நியாயமானது என்ற எண்ணம் உருவாகும். பல்வேறு போராளிகளுக்கும் அவர் உதவினார். அதற்கு நோக்கம் இருந்தது. இதற்கான முயற்சிகள் முற்றுப் பெறும் கட்டத்தில் 1984ஆம் ஆண்டு நவம்பரில் இந்திராகாந்தி படுகொலை செய்யப்பட்டார்.

நடைபெறாத நிகழ்ச்சிகள் குறித்து தீர்ப்புக் கூற வரலாற்றுத் துறையால் இயலாது. ஆனாலும் இந்திராகாந்தி உயி ரோடு இருந்திருப்பாரேயானால் தென் ஆசிய நலன்களுக்கு ஏற்ற வகையில் இலங்கை இனப் பிரச்சினைக்கு ஒரு தீர்வு ஏற்பட்டிருக்கக் கூடும். சிங்கள அரசோ அல்லது போராளிகுழுக்களோ தென் ஆசிய நலன்களுக்கு அப்பால் தங்கள் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ளும் அளவுக்கு வலிமை பெற்றி ருக்கவில்லை. வல்லரசுகளுக்கிடையே மறைமுகப் போர் நடைபெற்றுக் கொண்டிருந்த காலகட்டம் அது. தென் ஆசியாவின் காவல்காரனாக இந்தியா செயல்பட்ட நேரமும் அதுதான்.

இந்திராகாந்திக்குப் பின்னால் பிரதமர் பொறுப்பை ஏற்ற அவரது மகன் இராசீவ் காந்தி தனது தாயார் தவறான கொள்கையைக் கையாண்டதாகவும் அவரது ஆலோசகர்கள் அவருக்கு தவறான ஆலோசனையை வழங்கியதாக வும் நினைத்தார். ஆனால் இது உண் மைக்கு முற்றிலும் மாறானதாகும். உண்மையில் அவர் தான் அவருடைய ஆலோசகர்களால் தவறாக வழி நடத்தப்பட்டார்.

இலங்கை அரசிடமிருந்து பணம் பெறுவோர் பட்டியலில் இந்திய உளவுத் துறை அதிகாரிகள், வெளியுறவு அதிகாரி கள் இருந்தார்கள் என அப்போது குற்றம் சாட்டப்பட்டது.

இராசீவ்காந்தி அரசின் வெளியுறவுக் கொள்கை உருப்படாத கொள்கை என்பதை முதன்முதலாக விடுதலைப் புலிகள் உணர்ந்தனர். மற்ற போராளிக் குழுக்கள் உணரவில்லை. எனவே புலிகள் மாற்று நடவடிக்கைகளுக்கு திட்டம் தீட்டினர். 1985ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே தென் ஆசியாவுக்கு வெளியே உள்ள பல நாடுகளில் விடுதலைப் புலிகள் தங்கள் அலுவலகங் களைத் திறந்தனர். இசுரேல் நாட்டில் பயிற்சி பெறத் தங்கள் உறுப்பினர்களைப் புலிகள் இயக்கம் அனுப்பி வைத்தது. ஆனால் அதே நேரத் தில் சிங்கள இராணுவத்திற்கும் இசுரேல் பயிற்சி அளித்தது என்ற உண்மை பின்னால் தெரிய வந்தது. முதன்முதலாக இந்தியா வுக்கும் தென்ஆசியாவுக்கும் வெளியே இந்த பிரச்சினை கொண்டு செல்லப் பட்டது.
1987ஆம் ஆண்டு இந்திய அமைதிப் படை இலங்கைக்கு அனுப்பப் பட்டது தவறான காலம் தாழ்ந்த நடவடிக்கை ஆகும் 1984ஆம் ஆண்டு க்கும் 1987ஆம் ஆண்டுக்கும் இடையே செயலற்றுப் போன இந்தியாவின் கொள்கை மீது பல போராளி இயக்கங்கள் தங்கள் நம்பிக்கையை இழந்து விட்டன. விடுதலைப் புலிகள் இயக்கம் முற்றிலு மாக விலகி நின்று மற்ற போராளி இயக்கங்களைவிட வலிமையில் விஞ்சி நின்றது. போட்டி போராளி இயக்கங் களையும் அரசியல் கட்சித் தலைவர் களையும் விடுதலைப் புலியினர் கட்டுப்படுத்த அல்லது அப்புறப்படுத்த முடிந்தது. சிங்கள இராணுவம் தமிழ் மக்களுக்கு இழைத்த கொடுமைகளின் விளைவாக வெளிநாடுகளுக்குப் புலம் பெயர்ந்த மக்களும் சர்வதேச நாடுகளிடையே இதற்கான எதிரொலியை ஏற்படுத்தினார்கள்.


இந்தியாவுக்கும் இலங்கைக்கும் கையெழுத்திடப்பட்ட உடன்பாடு இந்தச் சூழ்நிலையில் நிலைமையைச் சமாளிப்பதற்குரியதாக இல்லை. தமிழர்களுக்கு இந்தியா அளிப்பதற்கு முன்வந்தவை போதுமானவையாகவும் இல்லை. இந்தியா வாக்களித்த மிகச் சொற்பமானவற்றைக் கூட சிங்கள அரசியல்வாதிகள் நிறைவேற்ற முன்வர வில்லை. இந்தியாவின் சார்பில் பிரச்சினையைச் சந்திக்க அனுப்பப்பட்ட வர்களும் திறமையற்றவர்களாக இருந் தார்கள். மீண்டும் ஒரு முறை சிங்களத் தலைவர்கள் தாங்கள் சிறந்த இராசதந்திரி கள் என்பதை நிலைநாட்டி விட்டார்கள்.

தங்கள் மீது நம்பிக்கை வைத் திருந்த தமிழ் மக்களின் நலன்களைக் காக்க இந்தியா தவறிவிட்டது. 1987ஆம் ஆண்டில் தன்னால் தீர்க்கக் கூடிய அளவு இருந்த இனப் பிரச்சி னையைத் தீர்ப்பதற்கான வாய்ப்பு களையும் இந்தியா நழுவ விட்டுவிட்டது. தென் ஆசியப் பகுதியின் பாதுகாப்பைப் பொறுத்த வரையில் இந்தியா பெரும் இழப்புக்கு உரியதாக ஆயிற்று. ஆனால் தான் கொண்ட குறிக் கோளுக்காக விடுதலைப் புலிகள் இயக்கம் உறுதியாக நின்று எத்தகைய சமரசமும் செய்து கொள்ளாமல் தன் வழியே சென்றது. தங்களுடைய துயரங் களிலிருந்து தங்களை விடுவிக்கும்
வலிமை படைத்தவர்கள் விடுதலைப் புலிகள் மட்டுமே என நம்பிய தமிழர்கள் அனைவரும் அதற்குப் பேராதரவை அளித்தார்கள். இதன் மூலம் அதன் வலிமை பெருகிற்று.

ஆனால் இலங்கை இனப் பிரச்சினை இலங்கைக்குள்ளாகவே அல்லது தென் ஆசியாவுக்குள்ளாகவே தீர்க்கப்படாமல் போனதன் விளைவாக அது சர்வதேச அரசியல் சூழலில் சிக்கிக் கொண்டுள்ளது. இலங்கை இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் பொறுப்பை நிறைவேற்ற சர்வதேச சமூகம் முன் வரவேண்டும் என வேண்டிக்கொண்டதில் விடுதலைப் புலிகளுக்கு முக்கிய பங்குண்டு. ஆனால் அதே வேளையில் தங்கள் மீது நம்பிக்கை வைத்த மக்களின் விருப்பத்திற்கு ஏற்ற வகையில் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண விடுதலைப் புலிகள் கடமைப்பட்டுள்ளனர்.

ஆனால் இராணுவ ரீதியில் இனப் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் சிங்கள அரசுக்கு சர்வதேச சமூகம் உதவிகள் செய்து வருகின்றது. ஆனால் உலகில் எந்த நாட்டின் ஆதரவும் இல்லாமல் விடுதலைப் புலிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்தச் சூழ்நிலையில் விடுதலைப் புலிகளுக்கும் அவர்களுக்கு ஆதரவான மக்களுக்கும் நிலைமையை எதிர்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. இதன் விளைவு என்பது இந்தியாவின் பாதுகாப்புக்குப் பேரபாயமாக எதிர்காலத்தில் விளங்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இலங்கையில் துன்பப்படும் மக்களுக்கு பேரழிவு ஏற்படாத வகையில் தடுக்க வேண்டிய பொறுப்பு சம்பந்தப்பட்ட அரசுகளுக்கு உண்டு. இந்தியாவும் தனது பொறுப்பைத் தட்டிக் கழிக்க முடியாது. சிங்கள அரசுகளுடன் செய்து கொண்ட இரகசிய உடன்பாடுகளும் இரகசிய உதவிகளும் வேண்டாத விளைவுகளையே தரும். இந்திய அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள இடைவெளி என்பது பிரச்சினையைத் தீர்ப்பதற்கு முட்டுக்கட்டையாக விளங்கும். பாக் சலசந்தியின் இரு புறமும் வாழும் தமிழர் களைக் கோபம் அடைய வைப்பது இந்தியாவின் பாதுகாப்புக்கு ஏற்றதல்ல.

0 comments: