Wednesday, January 2, 2008

இந்தியாவின் மறுபக்க வரலாற்று ஆவணம - இன்குலாப்

ஐயா பழ. நெடுமாறன் அவர்களுடைய மேற்கண்ட நூலைக் கொஞ்சம் தாமதமாகத்தான் படித்தேன். அவர்களுடைய நூல் வெளியீட்டு விழாவில் எனக்குத் தரப்பட்ட படியில் முதல் அத்தியாயத்தின் சில பகுதிகள் அச்சிடப்படாமல் வெறுமையாய் இருந்தன. இதனால் முதல் அத்தியாயத்தைப் படிக்காமல் நூலுக்குள் நுழைவதற்கு ஒருவகையான மனத்தடை இருந்தது. எனினும் முதல் அத்தியாயத்தை விடுத்துப் படிக்க ஆரம்பித்தேன். படிக்கத் தொடங்குமுன் இதற்குகொரு திறனாய்வு எழுதவேண்டும் என்ற சிந்தனை எல்லாம் இல்லை. இதனுடைய தலைப்புக்கு நூலாசிரியர் என்ன நியாயம் செய்கிறார் என்பதை அறிந்து கொள்ளும் ஆவல் மட்டுமே இருந்தது. ஆனால் நூலின் பக்கத்திற்குள் படர்ந்தபோது, இது தலைப்பால் மட்டும் துணிவு கொண்ட நூலன்று-விரித்துச் சொல்கிற செய்தி களாலும் விளக்கங்களாலும் துணிவு கொண்டது என்பதை உணர்ந்து கொண்டேன். எனினும் நூலை வெறும் வாசிப்பாகவே செய்து முடித்தேன். முக்கியச் செய்திகள் எதையும் குறித்துக் கொள்ளவில்லை. நூலாசிரியர் அவர்களுக்கு எனது பாராட்டுகளைத் தெரிவித்ததோடு

நூலின் முதல் அத்தியாயத்தைப் படிக்கவில்லை என்பதையும் சொன்னேன். பின்னொரு சமயம் நூலாசிரியரைச் சந்தித்தபோது, நூல்குறித்துப் பேசினேன். அவர் வேறொரு படியைத் தந்து படித்துப் பார்க்கச் சொன்னார். மறுபடியும் நூலைத் தொடக்கத்திலிருந்து படிக்க ஆரம்பித்தேன். ஆனால் இம்முறை குறிப்புகளோடு படிக்க ஆரம்பித்தேன். இரண்டாம் முறை வாசித்தது நூலின் பல்வேறு பகுதிகளை இன்னும் தெளிவுபடுத்தியது; படித்து முடித்தபின், எனக்குத்தோன்றியது, இந்த நூலை இந்தியத் துணைக் கண்டத்தின் மறுபக்க வரலாற்று ஆவண மாகப் பேணவேண்டும் என்பதுதான்.

இந்நூலுக்கு அணிந்துரை வழங்கிய முனைவர் த. செயராமன் நூலின் கருத்துக்களை மிக அழகாக வகை தொகை செய்து, அவற்றின் மீது தமது கருத்துக்களை வைத்துள்ளார்.

எதிரும் புதிருமாகத் தோற்றம் தரும் காங்கிரசும், பா.ஜ.க.வும் இந்துத்துவத்தின் புரவலர்கள்தான் என்பதை இந்நூல் தெளிவுபடுத்துவதை எடுத்துக்காட்டிய திரு த. செயராமன்,

"தேசிய இனப் போராட்டங்கள் மேலும் கூர்மையடைவதால் காங்கிரசும், பா.ஜ.க.வும் இனி இணைந்து செயல்படும்" என வருங்கால அரசியல் போக்கை இந்நூல் முன்னறிவிக்கிறது" என்று சரியாகவே மதிப்பிடுகிறார்.

இந்து தேசியம் இந்திய தேசியமாக உருவாகிய கதையைப் பரந்த அளவில் எடுத்துக்காட்டும் நூலாசிரியர், தம்முடைய முன்னுரையில், தேசிய விடுதலை இயக்கங்களுக்கும் சமுதாய விடுதலை இயக்கங்களுக்கும் நடுவில் உள்ள வேறுபாட்டையும் சுட்டிக்காட்டுகிறார்.

"சுருக்கமாகச் சொன்னால் தேசியப் புரட்சியை உருவாக்க விழைந்தார்களே தவிரச் சமூகப் புரட்சியை அவர்கள் வரவேற்கவில்லை. இதன் காரணமாகச் சுதந்திரப் போராட்டக் காலத்தில் நாடு முழுவதிலும் வேறுபட்ட போக்குகள் காணப்பட்டன. "வெள்ளையரை விரட்ட அணிதிரள்வீர்" என்ற முழக்கத்துடன் களம் இறங்கிய பிற்பட்டோர், ஒடுக்கப்பட்டோர் இயக்கங்கள் மறுபுறமும் போராடின. சாதி ஏற்றத் தாழ்வு இல்லாத சமுதாயம் காணப் போராடிய சக்திகளை அரவணைத்துக் கொள்ள இந்திய தேசியவாதிகள் அடியோடு தவறிவிட்டனர்" (ப.13).

இதற்கான முதன்மையான காரணம், தேசிய விடுதலைப் போராட்டத்திற்குத் தலைமை தாங்கியவர்கள் பார்ப்பனர்கள் அல்லது, பார்ப்பனிய மேலாண்மையை ஏற்றுக்கொண்டவர்கள். சமுதாய இயக்கங்களுக்குத் தலைமை தாங்கியவர்கள், தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், அல்லது பார்ப்பனிய மேலாண்மையை மறுத்தவர்கள், "இந்தியா காத்திருக்கிறது" என்ற நூலாசிரியர்கள் இதைப் போதிய விவரணங்களுடன் விளக்கியுள்ளனர்.

சிந்து சமவெளி நாகரிகத்தின் உரிமை குறித்த விவாதங்களோடு நூல் தொடங்குகிறது. சிந்து வெளியின் பூர்வ குடிகளாகிய திராவிடர்கள் எந்தச் சூழலில் ஆரியர்களை எதிர்கொண்டார்கள், எப்படிப்பட்ட உறவுகளைப் பேணினார்கள் என்பவை இன்னும் ஆய்வுக்குரிய செய்திகளாகவே உள்ளன. எனினும் சிந்து சமவெளி நாகரிகம் ஆரியர்களுடையது அன்று என்பதை விளக்க, போதுமான சான்றுகளை இந்நூல் தொகுத்துத் தருகிறது. வந்தேறிகளாகிய ஆரியர்களுடன் திராவிடர்கள் போரிட்டார்களா என்பதை விளக்கச் சான்றுகள் இல்லைதாம். ஆனால் வேதங்கள் குறிப்பிடும் தஸ்யூக்கள், அவர்களுடைய கோட்டைகளை அழித்தது என்ற செய்திகள், இச்சமவெளியின் உரிமை பற்றி நிகழ்ந்த போர்களாகலாம். இப்பகுதியில் குவிந்து கிடந்த வெட்டுக்காயங்களோடு கூடிய தொல் எலும்புக் கூடுகள் பற்றியச் செய்தியைச் சில ஆண்டுகளுக்கு முன்பு படித்தது நினைவுக்கு வருகிறது. ஆனால், இது ஆரிய -திராவிடப் பூசலின் விளைவாகக் காயமுற்று இறந்தோரின் உடலங்கள் என்று உறுதி செய்ய முடியாது என்றும் அச்செய்தி குறிப்பிட்டதும் நினைவில் நிற்கிறது. இந்நூலைப் படித்தபிறகு இப்பொழுதும் ஆரிய - திராவிடப் போர் நீடிப்பதை உணர முடிகிறது.

இன்று சிந்து சமவெளித் தரவுகளைத் தனக்கேற்ற வகையிலேயே ஆரியம் / பார்ப்பனியம் திரித்து விளக்கம் சொல்ல முனைகிறது. சிந்து சமவெளியின் பூர்வீக இனம் தான்தான் என்று வாதிடுகிறது. தனது ஆதிக்க நீட்டிப்புக்காகச் சிறுபான்மை இனங்களையும் மதங்களையும் பிறர் என்றும் அந்நியர் என்றும் முத்திரை குத்தத் தயங்காத பார்ப்பனியம் தன்னளவில் தான் பூர்வகுடி என்று நிறுவ முயல்கிறது. மூவாயிரம் ஆண்டுகளாகத் தொடரும் இந்தப் போராட்டம் கருத்தியல் தளத்தில் மட்டுமல்லாது கரத்தாலும் நீடித்துக் கொண்டிருப்பதை இந்நூலைப் படித்து முடித்த பின்பு உய்த்துணர முடியும்.

பழந்தமிழர் வாழ்வில் ஊடுருவிய பார்ப்பனியம், தமிழர்களின் வாழ்நெறிகள் அனைத்தையும் ஆரிய மயமாக்கியதை விரிவாகச் சொல்கிறது.. சமயம், வழிபாடு என்று ஊடுருவிய ஆரியம், அன்றாடம் விளிக்கும் பெயர்களைக்கூடத் தன் வயமாக்கிக்கொண்டதை விளக்குகிறார்கள். கடவுள் பெயர், ஊர்ப்பெயர் எல்லாம் சமஸ்கிருதமாயின. தமிழர் வைத்துக்கொள்ளும் பெயர்களில்கூட சாதிய இழிவு மரபு புகுந்ததைச் சொல்லிச் செல்கிறார்.

பெளத்தம், சமணம், ஆரிவகம் முத

லிய சமய இயக்கங்கள் தொடங்கி, அடிகளாரின் சமரச சன்மார்க்கம், வட இந்தியாவில் தோன்றிய சீர்திருத்த இயக்கங்கள், மகாராஷ்டிராவில் புலே, கேரளாவில் நாராயணகுரு, தமிழகத்தில் அய்யன்காளி, அயோத்திதாசப் பண்டிதர், பெரியாரின் சுயமரியாதை இயக்கம் என்பன போன்ற பல்வேறு இயக்கங்கள், இந்த வைதீகக் கொடுங்கோன்மையை எதிர்த்து எழுந்ததை விளக்குகிறார், எனினும், இவற்றின் சாரங்களை எல்லாம் புறந்தள்ள இவ்வியக்கங்களையே விழுங்கிய ஆரியத்தின் சூழ்ச்சித்திறனும் உரிய வகையில் அம்பலப்படுத்தப்படுகிறது.

இந்திய வரலாற்றாசிரியர்கள் நிறுவ முயலும் இந்திய தேசியம், பண்பாடு போன்றவை எல்லாம் அடிப்படையற்றவை என்பதை நூல் தெளிவுபடுத்துகிறது. சமகால வரலாற்றில், ஆங்கிலேய வல்லரசுக்கு எதிராக நடைபெற்ற விடுதலைப் போரைக்கூடப் பார்ப்பனியம் தனது நலன்களுக்கு ஏற்பவே தொடக்கத்தில் இருந்து வளைத்து வந்து தனதாக்கிக் கொண்ட மோசடியையும் இந்நூல் அம்பலப்படுத்துகிறது. இந்திய மாயைகளுக்கு எதிரான ஒரு வரலாற்று விமர்சனம் இது. மறுபக்க வரலாறு என்றுதான் படித்து முடித்தபின் மதிப்பிடத் தோன்றியது.

உருவாகாத இந்தியத் தேசியத்தையும், உருவான இந்து பாசிசத்தையும், விரிவாகவும், அமைதியாகவும் இந்நூல் விளக்கிச் செல்வதால் ஒரு பரபரப்பு நடை தவிர்க்கப்பட்டு, நிதானமாகச் சிந்திக்கத் தூண்டும் ஒரு நடை பேணப்பட்டிருக்கிறது. அவசரமாகப் படிக்க முடியும் நூலன்று இது. ஆழ்ந்து பயில வேண்டியது. இதை அரசியல்வாதிகள், தமிழறிஞர்கள், மாணவர்கள் உள்ளிட்ட இளைஞர்கள் அனைவரும் படித்து விவாதிக்க வேண்டியது அவசியம்.

உருவாகாத இந்திய தேசியத்துக்கு மறுதலையாக இயற்கை வழிப்பட்ட மொழிவழித் தேசியத்தை இந்நூல் இன்னும் விரிவாகப் பேசி இருக்க வேண்டும். பேசுகிறது. ஆனால் போதுமானதாய் இல்லை. காஷ்மீர் மக்களின் போராட்டம், காஷ்மீரிகளுக்கு இந்திய அரசு தந்த வாக்குறுதி, அம்மக்களுக்குச் செய்த மாறுபாடு, நாகலாந்து, மிசோராம், மணிப்பூர் மக்களின் தொடரும் வீரஞ்செறிந்த போராட்டங்கள் எல்லாம் விரிவாகச் சொல்லப்படவில்லை. ஒருவேளை நூலாசிரியர் தலைப்பின் கருவாகத் தேர்ந்துகொண்ட எல்லைக்குள் இந்நூல் பேசியவை போதும் என்று கருதினால், அதைக் குறைசொல்லல முடியாது எனில் நூலாசிரியருக்கு இப்போராட்டங்களை விளக்கி எழுதவேண்டிய கட்டாயம் இருக்கிறது என்பதை இந்நூல் கோருகிறது எனலாம். கிட்டத்தட்ட இந்நூல், நூலாசிரியரின் அயராத முயற்சிக்கும், விளக்கிச் சொல்லும் திறனுக்கும் எடுத்துக்காட்டு. "ஆற்றுவார் மேற்றே பொறை' என்பார் வள்ளுவர். இந்நூலுக்குத் தமிழ் கூறும் நல்லுலகம் நல்கும் வரவேற்பு, இன்னும் இதையொத்த நூல்களை ஆசிரியரிடமிருந்து பெற்றுத்தரும் என்று நம்பலாம்.

0 comments: