"புலிகள் ஊடுருவல் அறவே இல்லை" - தென் படைத்தளபதி "புலிகள் பொருட்களைக் கடத்துகிறார்கள்" -கியூ பிரிவு காவல்துறை எது உண்மை? எது பொய்? முதலமைச்சர் கலைஞரின் பதில் என்ன? - பழ. நெடுமாறன
தமிழ்நாட்டில் விடுதலைப்புலிகள் ஊடுருவி இங்கிருந்து பல்வேறு பொருட் களை இலங்கைக்குக் கடத்தி வருகின்றனர் என்று அண்மையில் தமிழக கியூ பிரிவு காவல்துறை பலர்மீது வழக்குத் தொடுத் துள்ளது. சில மாதங்களுக்கு முன்னால் சைக்கிளுக்குத் தேவையான பால்ரஸ் குண்டுகளை இங்கிருந்து கடத்தியதாக பலர் மீது வழக்குப் போடப்பட்டது.
ஆனால் இந்திய இராணுவத்தின் தென்மண்டலத் தளபதியாக உள்ள லெப். - ஜெனரல் நோபுல் தம்புராசு முதலமைச்சர் கலைஞரை 12-12-07 அன்று தலைமைச் செயலகத்தில் சந்தித்துப் பேசிய பிறகு பின்வருமாறு அறிவித்துள்ளார்.
"தமிழகக் கடல் பகுதியை கடலோர காவல் படையும், கடற்படையும் தொடர்ந்து கண்காணித்து வருகின்றன. விடுதலைப்புலிகளிடமிருந்து எத்தகைய அச்சுறுத்தலும் நமக்கு இல்லை. மாநில அரசும் போதுமான கண்காணிப்பைச் செலுத்தி வருகிறது. இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதாக குற்றச் சாட்டுகள் எழுந்துள்ளன. இந்தத் தாக்குதலைத் தடுத்து நிறுத்துவது குறித்துக் கடற்படை அதிகாரிகளுடன் பேசுவேன். இந்தியக் கடற்படையும் இலங்கை கடற்படையும் இணைந்து கூட்டுச் சுற்றுக் காவலில் ஈடுபடுவதற்கு வாய்ப்பு இல்லை. இலங்கையிலிருந்து அகதிகள் வந்து கொண்டுள்ளனர். இதனை மாநில அரசும் நாங்களும் தீவிரமாக கண்காணித்துக் கொண்டிருக்கிறோம். எனவே எந்தக் கட் டத்திலும் விடுதலைப்புலிகளின் ஊடுருவல் என்பது தமிழகத்தில் அறவே இல்லை" என்று கூறியுள்ளார்.
தென்பிராந்திய இந்தியப் படையின் தளபதி கூறுவது உண்மையா? அல்லது தமிழகக் காவல்துறையின் கியூ பிரிவு கூறுவது உண்மையா?-என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்திய நாட்டுக்குள் யாரும் ஊடுருவுவதைத் தடுக்கும் பொறுப்பு இந்தியப் படைக்கும், கடற்படைக்கும் உண்டு. தமிழகக் காவல்துறை அதைச் செய்ய முடியாது. அதற்கான அதிகாரமோ அல்லது வசதிகளோ அதற்குக் கிடையாது. இந்தச் சூழ்நிலையில் விடுதலைப்புலிகள் ஊடுருவிவிட்டதாகவும். தமிழகத்திலிருந்து படகு, மற்றும் பொருட்களை இலங்கைக்குக் கடத்திச் செல்வதாகவும் கியூ பிரிவு கூறி சிலரை அவ்வப்போது கைதுசெய்து வழக்குகள் தொடுத்து சிறையில் அடைத்து வருகிறது. அப்படியானால் இந்தியப் படையோ அல்லது கடற்படையோ, ஊடுருவலைத் தடுப்பதில் படுதோல்வி அடைந்துவிட்டன. எனவே அவர்களை மீறி தமிழ்நாட்டிற்குள் ஊடுருவிவிட்ட விடுதலைப்புலிகளை தாங்கள் சாமர்த்திய மாகப் பிடித்துவிட்டதுபோன்ற ஒரு தோற்றத்தை கியூ பிரிவு காவல்துறை உருவாக்குகிறது. அதாவது இந்தியப் படையும், கடற்படையும், திறனற்றவை என்பதுபோலவும் இவர்கள்தான் திறமை சாலிகள் என்பதுபோலவும் கியூ பிரிவு சொல்லாமல் சொல்கிறது. அதிலும் அண்மையில் அவர்கள் தொடுத்திருக்கிற ஒரு வழக்கு எவ்வளவு போலித்தனமானது என்பதை விவரம் அறிந்தவர்கள் அறிவார்கள்.
இலண்டனிலிருந்து கடாபி கருப்பையா என்பவர் பணம் அனுப்பி தமிழ்நாட்டில் படகு ஒன்றை வாங்கி இலங்கைக்கு கடத்துவதற்கு முயற்சி செய்ததாகவும் அதன் விளைவாக சிலரை கியூ பிரிவு காவல்துறை கைதுசெய்துள்ள தாகவும் பரபரப்பான செய்திகள் பத்திரிகைகளில் வெளியிடப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் மீனவர்களின் படகுகள் சாதாரண மீன்பிடி படகுகளே. ஆனால் புலிகளின் கடற்பிரிவான கடற்புலிப்படையில் பீரங்கிப் படகுகளும், அதிவேகப் படகு களும் கப்பல்களும் உள்ளன. சிங்களக் கடற்படை அதனுடன் ஈடுகொடுக்க முடியா மல் திணறுகிறது. கடற்புலிகள் வலிமை வாய்ந்த அமைப்பாக உருவாகியுள்ளார்கள். அவர்களுக்குத் தேவையான படகுகளை அவர்களே உற்பத்தி செய்கிறார்கள். தமிழ்நாட்டிலிருந்து மீன்பிடி படகைக் கடத்தவேண்டிய அவசியம் அவர்களுக்கு இல்லை. இந்த உண்மையைக் கூடத் தெரியாமல் அல்லது அதை மறைத்து விட்டு இப்படியொரு பொய்யான வழக்கை கியூ பிரிவு காவல்துறை தொடுத்திருப்பது கேலிக்கூத்தாகும்.
பல மாதங்களுக்கு முன்னால் தமிழ்நாட்டிலிருந்து பால்ரஸ் குண்டுகளை கடத்தியதாகவும் அவற்றின் துணை கொண்டு விடுதலைப்புலிகள் குண்டுகள் தயார்செய்ய உதவியதாகவும் ஒரு வழக்கை கியூ பிரிவு தொடுத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சைக்கிளுக்குத் தேவையான பால்ரஸ் குண்டுகளைக் கொண்டு வெடிகுண்டு செய்வது என்பது ஒருபோதும் இயலாத ஒன்றாகும். ஆனால் இந்த உண்மையை உணராத கியூ பிரிவினர் இப்படியொரு வழக்கை சோடித்ததின் மூலம் தங்கள் அறியாமையை வெளிப் படுத்திக்கொண்டுள்ளனர்.
கொழும்பில் பஞ்சிகாவத்தை என்ற பெரிய கடைவீதி உள்ளது. அந்த வீதி நெடுகிலும் சைக்கிள் உதிரி பாகங்கள் விற்கும் கடைகள் உள்ளன. இலங்கையில் சைக்கிளோ, அதனுடைய உதிரிபாகங் களோ உற்பத்தி செய்யப்படுவதில்லை. இந்தியாவிலிருந்து பிற நாடுகளிலிருந்தும் இறக்குமதி செய்யப்படுகின்றன. இந்தக் கடைகளுக்கு வரும் உதிரிபாகங்கள் பெரும்பாலானவை கடத்தல் மூலமே வருகின்றன. இந்த உண்மை இந்திய சுங்க அதிகாரிகளுக்கும் இலங்கை சுங்க அதிகாரிகளுக்கும் தெரியும். இந்தக் கடத்தல் இன்று நேற்றல்ல பல ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சுங்க அதிகாரிகளுக்கும் காவல்துறை அதிகாரிகளுக்கும் கையூட்டு அளிப்பதின் மூலமே இந்தப் பொருட்கள் கடத்தப்பட்டு வருகின்றன.
இது அனைவரும் அறிந்த உண்மையாகும். ஆனாலும் மிகப்பெரிய சதியைக் கண்டுபிடித்துவிட்டதுபோன்ற ஒரு தோற்றத்தை இந்த வழக்குகளின் மூலம் கியூ பிரிவு உருவாக்க முயலுகிறது. இந்த வழக்குகள் நீதிமன்றத்தில் நிற்கப் போவதில்லை. ஆனாலும் கைதுசெய்யப் பட்டவர்கள் பல மாதங்கள் சிறையில்வாட வேண்டி வரும். இறுதியில் அனைவரும் விடுதலை செய்யப்படுவார்கள். அப்படி யானால் இத்தகைய பொய்யான வழக்குகள் எதற்காகத் தொடுக்கப்படுகின்றன என்ற கேள்வி எழுகிறது.
இந்திய அரசு விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு தடைவிதித்துள்ளது. இரண்டாண்டுக்கு ஒருமுறை அந்தத் தடையைப் புதுப்பித்து வருகிறது. ஒவ்வொரு தடவையும் தடை நீட்டிக்கப் படுவதற்கு சிறப்பு நீதிமன்றம் ஒன்றின்முன் இந்திய அரசு மனு செய்யும். அப்போது விடுதலைப்புலிகள் தொடர்ந்து சட்ட விரோதமான செயல்களில் ஈடுபட்டு வருவதாகக் கூறி அதற்கான ஆதாரங் களை அளிக்கவேண்டும். இந்த நோக்கத் துடன்தான் மேற்கண்ட வழக்குகளை கியூ பிரிவு பொய்யாக சோடிக்கிறது. அடுத்த ஆண்டு மே மாதத்தில் இந்தத் தடையை நீட்டிக்கவேண்டிய அவசியம் உள்ளது. அதற்காகவே அவசரம் அவசரமாக இது போன்ற பொய்யான வழக்குகள் தொடுக்கப்படுகின்றன.
இத்தகைய பொய்வழக்குகளினால் விடுதலைப்புலிகளையோ அல்லது அவர்களுக்கு ஆதரவாக இங்கு செயல் படும் அமைப்புகளையோ மிரட்டிவிட முடியாது. அந்த நோக்கத்துடன் தொடுக்கப் படும் இந்த வழக்குகள் நேர் எதிர்மாறான விளைவுகளையே ஏற்படுத்தியுள்ளன என்பதைத் தமிழக அரசு உணரவேண்டும். இந்த வழக்குகளைச் சுட்டிக்காட்டி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் செல்வி ஜெயலலிதா தி.மு.க. அரசுக்கு எதிராக பிரச்சாரம் செய்ய முற்படுகிறார். கியூ பிரிவு தொடுத்துள்ள வழக்குகளை தி.மு.க அரசுக்கு எதிரான கணைகளாக அவர் ஏவுகிறார். இதற்கு கியூ பிரிவு உதவி செய்கிறது என்பதை முதலமைச்சர் கலைஞர் உணரவேண்டும்.
தமிழ்நாட்டில் கியூ பிரிவு என்பது தமிழகக் காவல்துறைத் தலைவரின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்குவதாகும். தமிழகக் காவல்துறையோ முதலமைச்சரின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்குகிறது. ஆனால் உண்மையில் மத்திய உளவுத் துறையின் நேரடிக் கட்டுப்பாட்டில்தான் கியூ பிரிவு இயங்குவதாக நம்பத்தகுந்த தகவல்கள் கூறுகின்றன. மத்திய உளவுத் துறையின் ஆணையின்படியே இத்தகைய பொய்வழக்குகளை கியூ பிரிவு தொடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.
மாநில சுயாட்சிக்காகக் குரல் கொடுத்துவரும் தமிழக முதலமைச்சர் கலைஞர் தனது கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கியூ பிரிவு காவல்துறையின்மீது மத்திய உளவுத்துறை ஆதிக்கம் செலுத்தி ஆட் டிப்படைப்பதை எவ்வாறு அனுமதிக் கிறார்? அதைத் தடுத்து நிறுத்தும் சக்தி அவருக்கு இல்லையா? இந்தப்போக்கு நீடிப்பது என்பது அவருக்கும் நல்லதல்ல தமிழ்நாட்டிற்கும் நல்லதல்ல. மாறாக அவருக்கு எதிராகச் செயல்படும் செல்வி ஜெயலலிதாவுக்கே இது உதவும் என்பதை முதலமைச்சர் உணரவேண்டும்.
இலங்கையில் இறுதிக்கட்டப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் விடுதலைப்புலிகளுக்கு எதிராகவும் அவர் களைக் கொச்சைப்படுத்தும் விதத்திலும் இத்தகைய பொய்யான வழக்குகளைத் தொடுப்பது என்பது சிங்கள இன வெறி யாட்சியை ஊக்குவிக்கும் செயலாகும்.
வங்காள தேச விடுதலைப் போராட்டம் நடைபெற்றபோது. முக்தி வாகினி படையினர் மேற்குவங்காளம், திரிபுரா, அசாம் போன்ற இந்திய மாநிலங் களின் எல்லைக்குள் தங்களின் முகாம் களை அமைத்துக் கொண்டு அங்கிருந்து வங்க தேசத்திற்குள் ஊடுருவி பாகிஸ்தான் படையினரைத் தாக்கியழித்துவிட்டு திரும்பவும் பத்திரமாக இந்திய எல்லைக் குத் திரும்பி வந்தனர். அவர்களை பாகிஸ்தான் படையினர் விரட்டிவந்தால் எல்லையில் உள்ள இந்தியப் படையினர் அவர்களைச் சுட்டு விரட்டியடித்தனர்.
ஆனால் விடுதலைப்புலிகள் தமிழ் நாட்டிற்குள் முகாம்கள் எதுவும் வைத்துக் கொண்டிருக்கவில்லை. இங்கிருந்து சென்று சிங்களப் படையைத் தாக்கவும் இல்லை. தங்கள் மண்ணில் பெரும் பகுதியை மீட்டு சுதந்திர பூமியாக்கி அதில்தான் தங்களது முகாம்களை அமைத்துக்கொண்டுள்ளனர். தங்கள் மண்ணில் இருந்துகொண்டுதான் சிங்களப் படையை எதிர்த்துப் போராடுகிறார்கள். அவர்களுக்குத் தேவையான ஆயுதங் களை உலகச்சந்தையில் இருந்து வாங்கு கின்றனர். எதிரியிடம் போராடி அவனது ஆயுதங்களைப் பறிக்கின்றனர். இந்தியாவி லிருந்து ஒருபோதும் ஆயுதங்களைக் கடத்துவது இல்லை. கடத்துவதற்கு தமிழ்நாட்டில் ஆயுதங்களும் விற்கப்படு வது இல்லை. அப்பட்டமான இந்த உண் மைகளை கொஞ்சமும் புரிந்து கொள்ளாது விடுதலைப்புலிகளைத் தொடர்ந்து கொச்சைப்படுத்துவது மிகக் கேவலமானதாகும்.
கியூ பிரிவு காவல்துறையினர் தொடுத்துள்ள வழக்குகளின் மூலம் கீழ்க்கண்ட அய்யங்கள் எழுந்துள்ளன. அவற்றை நீக்கவேண்டிய கடமை முதலமைச்சர் கலைஞருக்கு உண்டு,.
1. இந்தியக் கடல் எல்லையைப் பாதுகாத்து புலிகளின் ஊடுருவலைத் தடுக்கக் கடற்படையும், இராணுவமும் அடியோடு தவறிவிட்டனவா?
2. தமிழ்நாட்டில் நவீனப்போருக்குத் தேவையான ஆயுதங்கள் தயாரிக்கப் படுகின்றதா? விற்கப்படுகின்றதா?
3. தமிழக காவல்துறையின் செயற் பாடுகளை மத்திய உளவுத்துறை கண்காணித்துக் கட்டுப்படுத்துகிறதா?
மேற்கண்ட கேள்விகளுக்கு இல்லை என்பது பதிலானால் கியூ பிரிவு தொடுத்துள்ள வழக்குகள் பொய்யானவை என்பதை முதலமைச்சர் ஏற்கவேண்டி யிருக்கும். அவர் என்ன செய்யப்போகிறார் என்பதை அறிய தமிழர்கள் காத்திருக்கிறார்கள்.
Wednesday, January 2, 2008
எது உண்மை? எது பொய்?
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
is everyone very disciplined in a well disciplined school?
just like that
may be Navy is controlling ltte's open activities and police is catching what ever activities that come to its attention...
not anything can be controlled 100.00%
beside ltte pays big money to the beggars of Tamil nadu so those guys would be even willing to sell their mother and wife for ltte's money..don't you think so?
Post a Comment