Thursday, February 21, 2008

இந்தியப் பெருமுதலாளிகளுக்கு வலை விரிக்கும் சிங்கள அரசு

இந்திய அரசை தன்பால் முழுமையாக ஈர்ப்பதற்கு சிங்கள அரசு இடைவிடாது முயற்சி செய்துவருகிறது. இலங்கையில் உள்ள தமிழர்களைக் கொன்று குவிக்கும் தனது இனஒழிப்புத் திட்டத்திற்கு இந்திய அரசு குறுக்கே வந்துவிடக்கூடாது என்பதற்காக பல்வேறு மாய்மாலங்களை அது செய்கிறது.

இந்தியப் பெருமுதலாளிகளை இலங்கையில் தொழில்தொடங்க முன்வருமாறு சிங்கள அரசு அழைப்புக்குமேல் அழைப்பு விடுத்து வருகிறது. இந்த அழைப்பினை ஏற்று இத்திட்டம் குறித்துப் பேசுவதற்காக மத்திய இணை அமைச்சர் ஜெயராம் ரமேசு என்பவர் தலைமையில் உயர் அதிகாரிளை கொண்ட குழு ஒன்று இலங்கை வர இருக்கிறது என சிங்கள அரசு அறிவித்துள்ளது.

இந்தக் குழுவுடன் இந்தியப் பெருமுதலாளிகளான ரிலையன்சு, மகிந்திரா, பிர்லா, வர்த்தமான், அரவிந்த், இந்திய எண்ணெய் நிறுவனம் போன்றவற்றின் பிரதிநிதிகளும் செல்ல இருக்கிறார்கள்.

இந்தியா-இலங்கைக்கு இடையே சுங்கத்தீர்வையற்ற வணிக உடன்பாடு ஏற்கனவே கையெழுத்திடப்பட்டுள்ளது. மேலும் இந்தியப் பெருமுதலாளிகளுக்கு இலங்கை முதலீட்டு வாரியம் பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது.

ஏற்கனவே இலங்கையில் கறுப்புக் கார்பன் ஆலையை ரூபாய்.480 கோடி செலவில் அமைக்க ஆதித்தியா பிர்லா குழுமம் முன்வந்துள்ளது.

சிங்கள பேரினவாத அரசு இந்தியப் பெருமுதலாளிகளுக்கு விரித்துள்ள இந்த வலைப்பின்னலுக்குப் பின்னே ஆழமான நோக்கம் உள்ளது. இந்திய தொழில்-வணிக நிறுவனங்கள் இலங்கையில் நிறுவப்பட்ட பிறகு தங்கள் தொழிலையும், வணிகத்தையும் பாதுகாக்கவும் பெருக்கிக்கொள்ளவும், இந்தியப் பெருமுதலாளிகள் விரும்புவார்கள. அப்போது அவர்கள் மூலம் இந்திய அரசுக்கு நிர்ப்பந்தம் கொடுத்துத் தனக்கு ஆதரவாகத் திருப்பிக்கொள்ள முடியும் என சிங்கள அரசு கருதுகிறது. அதன் காரணமாகவே இந்திய முதலாளித்துவக் கும்பலுக்கு சிங்கள அரசு இரத்தினக் கம்பளம் விரித்து வரவேற்க முற்பட்டுள்ளது.

0 comments: