Saturday, February 9, 2008

அமைதிக்கு எதிரி இராசபக்சே பிரிட்டன் நாடாளுமன்றத்தில் குற்றச்சாற்று

இலங்கைப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் முயற்சிக்கு ராஜபக்சே அதிபராக உள்ள இலங்கை அரசு போதிய ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்று இங்கிலாந்து அமைச்சர் குற்றம் சாற்றியுள்ளார்.

இலங்கை இனச்சிக்கலைத் தீர்க்க அங்கு வாழும் தமிழர்களுக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்று இங்கிலாந்து வெளியுறவுத் துறை இணை அமைச்சர் ஹிம்ஹாவல் வலியுறுத்தியுள்ளார். இலங்கை இனச்சிக்கலைத் தீர்ப்பதற்கான அமைதி ஏற்படுத்தும் முயற்சிக்கு உதவவும் தயாராக இருப்பதாக அவர் கூறினார்.

நாடாளுமன்றத்தில் விவாதம்

இலங்கை இனச்சிக்கல் குறித்து இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெற்றது. விவாதத்தில் பல்வேறு கட்சியினரும் பங்கேற்றுப் பேசினார்கள். இலங்கை இனச்சிக்கலைத் தீர்க்க இங்கிலாந்து தலையிட வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.

அதற்கு விடையளித்து வெளிவிவகாரத்துறை துணை அமைச்சர் ஹிம் ஹாவல் ஆற்றிய உரை:

போர் மூலம் எதையும்சாதிக்க இயலாது இலங்கையில் போர்நிறுத்த உடன்பாட்டை ராஜபக்சே அரசு கைவிட்டிருப்பது கவலை அளிக்கிறது. இதனால் இலங்கை மனித உரிமை மீறல்கள் அதிகரிக்கவே செய்யும். போர் மூலம் எதையும் சாதித்துவிட முடியாது என்பதை இலங்கை அரசு உணரவேண்டும். இதே செய்தியை விடுதலைப்புலிகளுக்கும் நாங்கள் தெரிவித்துக்கொள்கிறாம். இலங்கையில் மனித உரிமைகள் மீறப்படாமல் பாதுகாப்பதற்காகக் கண்காணிப்புக் குழு ஒன்றை அமைக்க இங்கிலாந்து ஆதரவளிக்கும்.

இங்கிலாந்து தயாராக உள்ளது

இலங்கை இனச்சிக்கலுக்குத் தீர்வு காண்பதற்கான அமைதி முயற்சியில் ஈடுபட இங்கிலாந்து அரசு எப்போதும் தயாராகவே உள்ளது. இலங்கை அரசு இப்போது அழைத்தாலும் அமைதி முயற்சியில் ஈடுபடத் தயாராக உள்ளோம். ஆனால் இலங்கை அரசில் உள்ள சிலர் இங்கிலாந்தின் தலையீட்டை விரும்புவதில்லை. அவர்கள் எதார்த்த நிலையை உணராமல் இங்கிலாந்தை எதிர்க்கின்றனர். இலங்கை இனச்சிக்கலில் இங்கிலாந்து தலையிட்டால் அது அமைதியை ஏற்படுத்துவதற்காக மட்டுமே இருக்கும்; வேறு எந்த நோக்கமும் இங்கிலாந்துக்கு இல்லை.

தமிழர்களுக்கு தன்னாட்சி உரிமை

தமிழர்களின் போராட்டத்திற்குக் காரணம் அவர்களுக்குப் போதிய அதிகாரம் அளிக்கப்படாததுதான். அவர்களுக்கு உரிய அதிகாரங்களை வழங்குவதன் மூலம், இலங்கை இனச்சிக்கலை எளிதில் தீர்க்கலாம். தனி மாநிலங்களை ஏற்படுத்தி அதிகாரப் பகிர்வு வழங்க இலங்கை அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால் இது போதுமானதல்ல. ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழர்களுக்குத் தன்னாட்சி அதிகாரத்துடன் கூடிய மாநில அரசு அமைத்துத் தரப்படவேண்டும். இதற்கான நடவடிக்கைகளை இலங்கை அதிபர் ராஜபக்சே துணிவுடன் மேற்கொள்ள வேண்டும். அதற்கு மற்ற நாடுகளும் ஆதரவு அளிக்க வேண்டும்.

தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு வழங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள அனைத்துக்கட்சிக் குழுவில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பைச் சேர்க்காதது மிகப்பெரிய குறையாகும். இன்னும் ஒரு வாரத்திற்குள் அக்குழு அதிகாரப் பகிர்வுத் திட்டத்தை வழங்க உள்ளது. அக்குழுவின் பரிந்துரைகள் சிறுபான்மை யினரான தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும வகையில் இருக்க வேண்டும்.

இவ்வாறு ஹிம்ஹாவல் பேசினார்.

0 comments: