Monday, November 23, 2009

உயிர்நீத்த தமிழர்களுக்காகத் தியாகத் தீபங்கள் ஏற்றுவீர்!

உயிர்நீத்த தமிழர்களுக்காகத் தியாகத் தீபங்கள் ஏற்றுவீர்! இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் பழ.நெடுமாறன் வேண்டுகோள்

இலங்கையில் நடைபெற்றபோரில் சிங்களப்படையால் படுகொலை செய்யப்பட்ட ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட ஈழத்தமிழர்களுக்கும், போராளிகளுக்கும் மற்றும் தமிழ்நாட்டிலும் உலக நாடுகளிலும் ஈழத்தமிழர்களுக்காகத் தீக்குளித்து உயிர்த் தியாகம் செய்த முத்துக்குமார் உள்ளிட்ட 18 தமிழர்களுக்கும் வீரவணக்கம் செலுத்தும் வகையில் வருகிற நவம்பர் 27ஆம் தேதியன்று தமிழகமெங்கும் அமைதி ஊர்வலங்களையும், அஞ்சலிக் கூட்டங்களையும் நடத்துமாறு அனைத்துத் தமிழர்களையும் வேண்டிக் கொள்கிறேன். அன்றிரவு தமிழர் வீடுகளில் தியாகத் தீபங்கள் ஏற்றி மறைந்தவர்களின் நினைவைப் போற்றுமாறு வேண்டிக்கொள்கிறோம்.

அத்துடன் இலங்கை இனவெறி அரசு முப்படை கொண்டு நடத்திய மூர்க்கத்தனமான போரில் குண்டடி பட்டு காயமடைந்து, உடல் உறுப்புகளையும், குடியிருப்புகளையும் இழந்து, இன்றும் சித்திரவதைக் கூடங்களில் அளவிட முடியாத கொடுமைகளை அனுபவித்து வரும் இலங்கைத் தமிழ் மக்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும் உறுதி ஏற்க வேண்டுகிறோம்.

( பழ. நெடுமாறன் )
ஒருங்கிணைப்பாளர்
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம்

Friday, August 14, 2009

இலங்கையில் சுமூக நிலையா? - கருணாநிதிக்கு பழ.நெடுமாறன் கண்டனம்

இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை:

‘‘இலங்கையில் இப்போது சுமூக நிலை ஏற்பட்ட விட்டப் பிறகும் கூட அந்த பிரச்னையை கிளறிவிட்டுக் கொண்டிருப்பவர்களை எனக்குத் தெரியும்’’ என முதலமைச்சர் கருணாநிதி அவர்கள் கூறியிருப்பது தமிழர்கள் அனைவரையும் வேதனை அடைய செய்துள்ளது.

ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதை சுமூக நிலை என்று கருதுகிறாரா? அல்லது 3 இலட்சத்திற்கு மேற்பட்ட தமிழர்கள் முள்வேலி வதை முகாம்களுக்குள் முடக்கப்பட்டு உணவு, குடிநீர் மருந்தில்லாமல் தினமும் 200 பேருக்கு மேல் செத்துக் கொண்டிருக்கிறார்களே, அதை சுமூக நிலை என்று கருதுகிறாரா? தமிழர்களுக்கு என்று தனித் தாயகம் எதுவும் கிடையாது என்று கூறி தமிழர் பகுதிகளில் சிங்களரைக் குடியேற்றுவதைச் சுமூக நிலை என்று கருதுகிறாரா? எது சுமூக நிலை?

இவ்வளவு கொடுமைகள் இலங்கையில் நடந்துக் கொண்டிருக்கும் போது அதைக் கண்டித்து ஒரு வார்த்தை இது வரை சொல்லாதவர் இப்போது அங்கு சுமூக நிலை நிலவுகிறது என்று கூறுவதின் மூலம் இராசபக்சே நடத்தி வரும் அட்டூழியங்களை மறைப்பதற்குத் துணை செய்யும் வகையில் செயல்படுகிறார். கருணாநிதியின் இந்தத் துரோகத்தைத் தமிழர்கள் ஒரு போதும் மன்னிக்க மாட்டார்கள்.

Thursday, July 2, 2009

சிங்களருக்கு வெண்சாமரம் வீசும் கருணாநிதி - பழ.நெடுமாறன் கண்டனம்

இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை:

‘ஈழத் தமிழர்களின் வாழ்வாதாரத்தைப் பெருக்க வேண்டுமேயானால் சிங்கள அரசின் மூலமாகதான் அதைச் செய்ய முடியும். எனவே நம்முடையப் பேச்சால், நம்முடைய நடவடிக்கையால் சிங்களவர்களுடைய கோபத்தை அதிகரிக்கும் வகையில் எதுவும் செய்துவிடக் கூடாது.’ என முதல்வர் கருணாநிதி தமிழகச் சட்டமன்றத்தில் கூறியிருக்கிறார்.

ஏறத்தாழ ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்களை ஈவு இரக்கமில்லாமல் படுகொலை செய்த இராஜபக்சேக்கும் அவருடைய கூட்டத்திற்கும் ஆத்திரமூட்டும் எத்தகைய நடவடிக்கையிலும் ஈடுபடாமல் நடந்து கொள்ள வேண்டுமென தமிழர்களுக்கு கருணாநிதி அறிவுரை வழங்கியிருக்கிறார். அதாவது உதைக்கிற காலுக்கு முத்தமிட வேண்டுமென்று வற்புறுத்தியிருக்கிறார்.

கன்னடர்களுக்கு கோபமூட்டாமல் காவிரிப் பிரச்னையிலும், மலையாளிகளுக்கு கோபமூட்டாமல் முல்லைப் பெரியாறு பிரச்னையிலும் நீக்குப் போக்குடன் கருணாநிதி நடந்து கொண்டதினால்தான் அப்பிரச்னைகளில் தமிழகம் மிகப் பெரிய இழப்புகளுக்கு ஆளாக நேரிட்டது.

ஈழத் தமிழர் பிரச்னையிலும் காங்கிரசுக் கட்சிக்குக் கோபமூட்டி அதன் விளைவாக தேர்தல் உறவு பாதிக்கப்பட்டு விடக் கூடாதே என்பதற்காக இவர் கையாண்ட அணுகுமுறையின் விளைவாக ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட ஈழத் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள்.

அது மட்டுமல்ல, ‘தமிழீழத் தனி நாடு இனி சாத்தியமானது அல்ல. சம உரிமையும் சம அதிகாரமும் கொடுக்குமாறு வேண்டி சிங்களரிடம் மண்டியிட வேண்டு’மென்றும் ஆலோசனை வழங்கியிருக்கிறார். ‘கொள்கையைக் கைவிடுவதற்கும் ஒரு துணிச்சல் வேண்டும். திராவிட நாடு கொள்கையை தி.மு..க கைவிட்டதற்கு காரணம் கட்சியை ஒழிப்பதற்கு சட்டம் வந்த போது திராவிட நாடா அல்லது கட்சியா என்ற கேள்வி எழுந்தது. எனவே முதலில் கட்சிதான் வேண்டுமென்று முடிவெடுத்ததாக’வும் முற்றிலும் உண்மைக்கு மாறான தகவலை கூறியிருக்கிறார்.

பிரிவினைக் கேட்கும் கட்சிகள் தடை செய்யப்படும் என்ற சட்டம் கொண்டு வரப் படவில்லை. பிரிவினைக் கேட்கும் கட்சிகள் தேர்தலில் போட்டியிட முடியாது என்றுதான் சட்டம் கொண்டு வரப்பட்டது. தேர்தலில் போட்டியிட்டு பதவி சுகம் அனுபவிப்பதற்கு இச்சட்டம் தடையாக இருக்கும் என்று கருதியதால்தான் திராவிட நாடு கோரிக்கை குழி தோண்டி புதைக்கப்பட்டது. வரலாற்றுப் பூர்வமான இந்த உண்மையைத் திரித்து பேசுகிறார் கருணாநிதி.

30 ஆண்டு காலம் அற வழியில் சம உரிமைக் கேட்டு ஈழத் தமிழர்கள் போராடினார்கள். எதுவுமே கிடைக்காத காலக்கட்டத்தில் ஆயுதம் தாங்கியப் போராட்டம் வெடித்தது. இந்த போராட்டத்தில் 2 இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் சிங்கள இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டார்கள். 15 இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் சொந்த மண்ணில் வாழ வழியில்லாமல் அயல்நாடுகளில் அகதிகளாக அடைக்கலம் புகுந்தார்கள். தமிழீழப் பகுதி முழுவதிலும் பாதிக்கப்படாத தமிழர் குடும்பமே இல்லை. இவ்வளவு தியாகங்களை ஈழத் தமிழர்கள் செய்த பிறகு அந்தப் போராட்டத்தைக் கொச்சைப் படுத்தவும் பின்னோக்கித் தள்ளவும் கருணாநிதி முயற்சி செய்வதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

உலகத்தின் பல நாடுகள் இராஜபக்சே அரசின் மனித உரிமை மீறல்களை மிகக் கடுமையாகக் கண்டனம் செய்யும் கட்டத்தில் அவருக்கு வெண்சாமரம் வீசும் வேளையில் தமிழக முதலமைச்சர் ஈடுபட்டிருப்பது வெட்கக் கேடானதாகும். இதன் மூலம் உலக நாடுகள் நடுவில் ஈழத் தமிழர் போராட்டம் குறித்து ஒரு தவறானக் கண்ணோட்டத்தை ஏற்படுத்த அவர் செய்யும் முயற்சி வெற்றி பெறப் போவதில்ல. ஈழத் தமிழரின் மன உறுதி ஒரு போதும் தளரப் போவதில்லை. அவர்களுக்கு ஆதரவாக உலகத் தமிழர்களின் போரட்டங்களும் ஓயப் போவதில்லை.

Wednesday, April 29, 2009

ஆயிரக்கணக்கான மக்கள் கொலை - போர் நிறுத்தம் ஏற்படவில்லை

தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் அமைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை!

தனது உண்ணாவிரதப் போராட்டத்தின் விளைவாக இலங்கையில் போர் நிறுத்தம் முழுமையாக அமுல் படுத்தப்படும் என முதலமைச்சர் கருணாநிதி நம்பிக்கைத் தெரிவித்து இருக்கிறார்.

ஆனால் சிங்கள அரசு நேற்று பீரங்கிகள் மூலம் தாக்குதல் நடத்தி 5000-க்கும் மேற்பட்ட குண்டுகளை தமிழ் மக்கள் மீது வீசியுள்ளது. ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டிருப்பதாக செய்திகள் கிடைத்துள்ளன. ஆனால் இதை மழைக்குப் பின் ஏற்படும் தூவானமாக சொல்லி கருணாநிதி அலட்சியப்படுத்துகிறார்.
இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட்டுவிட்டதாகக் கூறி தன்னையும் ஏமாற்றிக் கொண்டு தமிழக மக்களையும் ஏமாற்றுவதற்கு கருணாநிதி முயல்வதை வன்மையாகக் கண்டிக்கிறேன். தேர்தல் முடிவுகளை இலங்கைத் தமிழர் பிரச்னை எந்த அளவிலும் பாதிக்காது என்றும் கருணாநிதி கூறியிருக்கிறார்.

அப்படியானால் தேர்தல் வேளையில் எதற்காக உண்ணாவிரதம் இருந்தார் என்பதையும் அவசரம் அவசரமாக உதவிப் பொருட்களை தேர்தல் வேளையில் இலங்கைக்கு அனுப்பி பத்திரிகைகளில் விளம்பரம் செய்தது ஏன் என்பதையும் அவர் விளக்க வேண்டும். நாடாளுமன்றத் தேர்தலில் ஈழத் தமிழர் பிரச்னைதான் மிக முக்கியப் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்படவோ அல்லது அப்பாவி தமிழர்கள் கொல்லப்படுவதைத் தடுத்து நிறுத்தவோ காங்கிரசுக் கட்சியின் தலைமையில் இயங்கும் மத்திய அரசு எதையும் செய்யவில்லை என்பதையும் மத்திய ஆட்சி செய்த தவறுகளுக்கு கருணாநிதி துணை நிற்கிறார் என்பதையும் தமிழக மக்கள் நன்கு புரிந்துக் கொண்டிருக்கிறார்கள். அதன் விளைவு இந்த நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும் என எச்சரிக்கிறேன்.

Tuesday, April 21, 2009

இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் அமைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை

இலங்கையில் வன்னியின் பாதுகாப்பு வலயப்பகுதியில் இருந்த வெளியேறிய ஆயிரக்கணக்கான தமிழர்களைப் பணயக்கைதிகளாக முன்னிறுத்தி சிங்கள இராணுவம் மேற்கொண்ட தாக்குதலில் 2000 க்கும் மேற்பட்டத் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 3000 க்கும் மேற்பட்டத் தமிழர்கள் படுகாயமடைந்துள்ளனர். மக்கள் இருக்கும் பகுதிகளில் தொடர்ந்து கொத்துக் குண்டுகளை சிங்கள இராணுவம் வீசி வருகிறது. இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு ஒரே நாளில் இவ்வளவு பெருந்தொகையான மக்கள் எந்த நாட்டிலும் படுகொலை செய்யப்பட்டதில்லை என்பதை வருத்தத்தோடு தெரிவித்துக்கொள்கிறோம்.

ஐ. நா. பேரவை உட்பட உலக நாடுகள் பலவும் போர் நிறுத்தம் செய்புமாறு விடுத்த வேண்டுகோளை கொஞ்சமும் மதிக்காமல் சிங்கள் அரசு தமிழர்களை அடியோடு அழிக்க முயலுகிறது. 2000 க்கும் மேற்பட்ட தமிழர்களைப் படுகொலை செய்ததை மறைக்கவும் திசை திருப்பவும் பிரபாகரன் இருப்பிடத்தை சுற்றி வளைத்து விட்டதாகப் பொய்ப் பிரச்சாரம் செய்கிறது. 25 ஆண்டுகாலத்திற்கு மேலாக மக்கள் துணையுடன் போராடி வரும் விடுதலைப்புலிகள் தங்கள் போராட்டத்தை வெற்றிகரமாக தொடர்வார்கள் என்பதில் ஐயம் இல்லை.

இந்த மனிதப் பேரழிவைத் தடுத்து நிறுத்த இந்திய அரசு முன் வராததைக் கண்டிக்கும் வகையிலும் கொல்லப்பட்ட தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்துகிற வகையிலும் வருகிற ஏப்ரல் 24 ந் தேதி வெள்ளிக்கிழமையன்று மாலை 4:00 மணி முதல் 6:00 மணி வரை தமிழகமெங்கும் கறுப்புக்கொடி ஊர்வலங்களை நடத்துமாறும் சரியாக 6 மணிக்கு அனைவரும் ஒன்று கூடி அமைதி அஞ்சலி செலுத்துமாறும் வேண்டிக்கொள்கிறேன். அமைதி அஞ்சலி செலுத்தும் வேளையில் சகலப் போக்குவரத்தையும் நிறுத்தி அவரவர்கள் இருந்த இடத்திலிருந்தும் வீடுகளில் இருப்போர் வீட்டுக்குள்ளேயும் ஐந்து நிமிட நேரம் அஞ்சலி செலுத்துமாறு வேண்டிக்கொள்கிறேன்.

Sunday, April 12, 2009

தேர்தல் தோல்வி பயத்தில் போர் நிறுத்தம் பற்றி பேசுகிறார் சிதம்பரம் - பழ. நெடுமாறன் அறிக்கை

தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் அமைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை :

விடுதலைப் புலிகள் ஆயுதங்களை ஒப்படைத்தால்தான் சிங்கள அரசு போர் நிறுத்தம் செய்யும். இல்லாவிட்டால் செய்யாது என இராஜபக்சேயின் இறுமாப்புக் குரலில் சில வாரங்களுக்கு முன்பாக பேசிய மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம், தேர்தலில் தோல்வியைச் சந்திக்க நேர்ந்துவிடும் என்ற அச்சத்தில் இப்போது வேறு குரலில் பேசுகிறார்.

இலங்கையில் இருதரப்பினரும் போர் நிறுத்தம் செய்ய வேண்டுமென இந்திய அரசு இரு நாட்களுக்கு முன்பாகவே வேண்டுகோள் விடுத்திருப்பதாக சிவகங்கையில் நேற்று சிதம்பரம் கூறியுள்ளார். வெளியுறவுத் துறை அமைச்சரோ பிரதமரோ எதுவும் கூறாமல் மவுனம் சாதிக்கும் நிலையில் ப. சிதம்பரம் திடீரென இவ்வாறு கூறுவதன் பின்னணி என்ன?

போர் நிறுத்தத்தில் இந்திய அரசுக்கு உண்மையில் அக்கறை இருந்தால் இலங்கைக்கு அளிக்கும் ஆயுத உதவி, நிதி உதவி ஆகியவற்றை உடனடியாக நிறுத்துவதாக அறிவிக்க வேண்டும். ஆனால் இரு நாட்களுக்கு முன்பாக இந்திய அரசு 5,800 கோடி ரூபாய் நிதி உதவி அளிப்பதாக அறிவித்துள்ளது. அந்த பணத்தைக் கொண்டு சிங்கள அரசு ஆயுதங்களை வாங்கி தமிழர்களை கொன்று குவிக்கும் என்பதில் அய்யமில்லை. இந்த நிதி உதவியை நிறுத்தி வைக்க இந்திய அரசு தயாரா?

போர் நிறுத்தத்தில் இந்திய அரசுக்கு நம்பிக்கை இருந்தால் இலங்கை கடலில் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் இந்திய போர்க் கப்பல்களைத் திரும்பப் பெற வேண்டும். இவற்றையெல்லாம் இந்திய அரசு செய்தால் ஒழிய இலங்கை அரசு போர் நிறுத்தம் செய்யாது.

இந்திய அரசின் இந்த வேண்டுகோளுக்குப் பிறகும் இரு நாட்கள் மட்டுமே தாக்குதலை நிறுத்தப் போவதாக இராஜபக்சே அரசு அறிவிக்கும் என செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழக மக்களை ஏமாற்றுவதற்காக இந்திய அரசு நடத்தும் நாடகத்தை ஒரு போதும் யாரும் நம்பப் போவதில்லை என்பதை சிதம்பரம் உணர வேண்டும். இலங்கையில் தமிழர்களுக்கு ஏற்பட்ட பேரழிவிற்கு இந்திய அரசு முக்கியமான பொறுப்பாகும். இந்த துரோகத்தின் விளைவை நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரசு அணி சந்திக்கும்.

Friday, April 10, 2009

தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை

""தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் பிடிபட்டால் அவரைக் கெளரவமாக நடத்த வேண்டும்'' என முதல்வர் கருணாநிதி விடுத்திருக்கும் வேண்டுகோள் விஷமத்தனமானது. தீய உள்நோக்கம் கொண்டது. இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

இந்திய, சீன, பாகிஸ்தான் நாடுகள் வாரி வழங்கியுள்ள நவீன ஆயுதங்களை ஏந்திப் போராடும் சிங்கள ராணுவத்தை எதிர்த்து வீரம் செறிந்த விடுதலைப் போராட்டத்தை பிரபாகரன் தலைமையில் விடுதலைப்புலிகள் நடத்தி வருகிறார்கள்.

நமது மக்களைக் காப்பாற்றப் போராடும் புலிகளுக்கு ஆதரவாக ஒரு வார்த்தை கூறவோ அல்லது ஈழத்தமிழர்கள் மீது நச்சு வாயுக் குண்டுகளை வீசி கொடூரமாகக் கொலை செய்யும் சிங்கள வெறியர்களைக் கண்டிப்பதற்கோ இதுவரை முன்வராத கருணாநிதி அவர்களின் முதுகில் குத்துவதைப் போன்று பேசியிருப்பதைத் தமிழர்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்.

கருணாநிதியின் விஷமத்தனமான விருப்பம் ஒரு போதும் நிறைவேறப்போவது இல்லை. பிரபாகரன் தலைமையில் விடுதலைப் புலிகளும் ஈழத்தமிழர்களும் வெற்றி பெறப்போவது உறுதி. கருணாநிதி தன் வாழ்நாளிலேயே அதைக் காண்பார்.

இங்ஙனம்
பழ. நெடுமாறன்
தலைவர்