Sunday, June 15, 2008

உலகத் தமிழர் பேரமைப்பு இந்திய-இலங்கைத் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்புத் தோற்றம்

உலகத் தமிழர் பேரமைப்பில் இணைந்த தமிழ்ச் சங்கங்களின் கூட்டம் 24-05-08 அன்று திருச்சியில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பேரமைப்புத் தலைவர் பழ. நெடுமாறன் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் அ. பத்மனாபன், மா.செ. தமிழ்மணி, பேரா. மருதமுத்து, சின்னப்பத் தமிழர், தம்பி பழனிச்சாமி, தங்கதுரை, இளங்கண்ணன், க. சச்சிதானந்தன், செங்கொடி, பரணன், காமராசன், அசோக்குமார், முத்து, நிலவழகன், அரணமுறுவல் உட்பட பலர் உரையாற்றினர்.

இந்திய-இலங்கைத் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு இக் கூட்டத்தில் உருவாக்கப்பட்டது. இதன் தலைவராக மறவன்புலவு க. சச்சிதானந் தம், துணைத் தலைவர்களாக புலவர் க. சுப்பிரமணியம் (கர்நாடகம்) மு. முத்துராமன் (கேரளா) ஆ. நெடுஞ்சேரலாதன், மா.செ. தமிழ்மணி பொதுச்செயலாளர்களாக தி. அழகிரிசாமி, அரணமுறுவல், பொருளாளராக பொன்னிறைவன் மற்றும் செயற்குழு உறுப்பினர்களாக வ. வேம்பையன், மரு. வே. குழந்தைவேலு, நாக.இரகுபதி, திருமதி. தமித்தலெட்சுமி, தம்பி பழனிச்சாமி, ந.மு. தமிழ்மணி, பேரா. அறிவரசன், சின்னப்ப தமிழர், சி. தங்கதுரை, முத்துச்செல்வன், ஆ. கருப்பையா, திருமதி. அ. செங்கொடி, மு.வ. பரணன், மரு. பழனிச்சாமி, சக்தி காமராசன், நிலவழகன், இரா. சோ. ராமசாமி, தமிழ்வேங்கை, வேலுமணி ஆகியோர் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

1. அயலகத் தமிழர்களுக்கு இடஒதுக்கீடு

உலகெங்கும் வாழும் எட்டுகோடி தமிழர்களில் 2 கோடி பேர் தமிழ்நாடு தவிர்த்த பிற மாநிலங்களிலும், வெளி நாடுகளிலும் வாழ்ந்து வருகிறார்கள். அயல்நாடுகளில் வாழும் தமிழர்களுக்குத் தமிழ்நாட்டு உயர்கல்வி நிறுவனங்களில் 5 விழுக்காடு இடங்களையும் வேலை வாய்ப்பில் 5 விழுக்காட்டு இடங்களையும் ஒதுக்குவதோடு. இந்தியாவின் பிற மாநிலங்களில் வாழும் தமிழர்களுக்கும் உயர்கல்வி நிறுவனங்களில் 5 விழுக் காட்டு இடங்களையும் வேலைவாய்ப்பில் 5 விழுக்காட்டு இடங்களையும் ஒதுக்கித் தமிழர்களின் தாயகம் தமிழ்நாடு என்பதை உறுதி செய்ய வேண்டுமாய்த் தமிழக அரசை இந்திய-இலங்கைத் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு வேண்டிக்கொள்கிறது.

2. பிறமாநிலங்களில் இடஒதுக்கீடு

மொழிவாரி மாநிலங்களாக ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகியவை பிரிந்தபோது அந்தந்த மாநிலங்களில் உள்ள சாதி வாரிப் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து சென்ற தமிழர்களின் சாதிப்பெயர்கள் இடம்பெறவில்லை. ஆனால் தமிழ்நாட்டில் பழைய ஒன்றுபட்ட சென்னை மாகாண சாதிப்பட்டியல் அப்படியே வைக்கப்பெற்று இல்லாத சாதிகளுக்கும் கல்வியிலும் வேலையிலும் ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. அண்டை மாநிலங்களில் உள்ள தமிழர்களை அந்தந்த மாநிலங்களிலுள்ள பட்டியலில் சேர்த்துக்கல்வியிலும் வேலையிலும் இடஒதுக்கீடு வழங்கத் தமிழ்நாட்டரசு நடவடிக்கை மேற்கொள்ள இந்திய-இலங்கைத் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு வேண்டிக்கொள்கிறது.


3. ஈழத்தமிழ் அகதிகள்

ஐ.நா. பேரவையின் சார்பில் உருவாக்கப்பட்டுள்ள ஐ.நா. அகதிகள் ஆணையம் உலகநாடுகளில் உள்ள அகதிகளுக்குச் செய்யவேண்டிய உதவிகள் அனைத்தையும் செய்து வருகிறது. இந்த ஆணையப் பட்டயத்தை ஏற்று பல்வேறு நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. இந்தியா இன்னும் ஏற்றுக் கையொப்பம் இடவில்லை. இதனால் இலங்கையிலிருந்து வந்து தமிழ் அகதிகளுக்கு ஐ.நா. அகதிகள் ஆணையம் உதவமுடிய வில்லை. இந்திய அரசு அகதிகள் ஆணையத்தை ஏற்றுக்கொள்வதுடன் இலங்கை அகதிகளுக்கு ஐ.நா. அகதிகள் ஆணையம் வழங்கும் உதவிகளைப் பெற்றுத் தர செய்ய வேண்டும் என்று இந்திய-இலங்கைத் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு வேண்டிக்கொள்கிறது.

4. பிறமாநிலத்தவர்களுக்கு தமிழ்வழிக்கல்வி

தமிழ்நாட்டில் வாழும் தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, உருது, மராட்டி போன்ற மொழிபேசும் சிறுபான்மையினர் தங்களுக்குரிய கல்வி, வேலைவாய்ப்பு கலை, பண்பாடு உள்ளிட்ட அனைத்து வாழ்வியல் உரிமைகளையும் தாராளமாகப் பெற்றுவரும் அதே நேரத்தில் அண்டை மாநிலங்களில் வாழும் தமிழர்கள் இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள எந்த உரிமையையும் அனுபவிக்க முடியாமல் அல்லலுறுகிறார்கள். தாய்மொழியில் கற்கும் அடிப்படை உரிமையைக் கூட பெறமுடியாமல் உள்ளார்கள். இந்தியாவின் பிறமாநிலங்களில் வாழும் தமிழர்களுக்கு அந்தந்த மாநிலங்களில் மொழிச் சிறுபான்மையினருக்கான உரிமைகளை வழங்க இந்திய அரசு ஏற்பாடு செய்வதுடன் அதைக் கண் காணிக்கவும் வழிவகை செய்ய வேண்டுமென்று இந்திய-இலங்கைத் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு வேண்டிக்கொள்கிறது.

5. உலகப் பல்கலைக்கழகங்களில் தமிழ்

இந்திய அரசு தமிழைச் செம்மொழியாக அறிவித்துள்ள இந்த நேரத்தில் உலகெங்கும் உள்ள பல்கலைக் கழகங்களில் தமிழ்மொழிக்கு ஆய்வு இருக்கைகளை ஏற்படுத்த வேண்டும் என்றும் வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களில் தமிழ்ப்பட்ட, மேற்பட்ட, ஆய்வுப்பட்ட மாணவர்களுக்கும் உதவித் தொகை வழங்க வேண்டுமென்று இந்திய அரசை இந்திய-இலங்கைத் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு வேண்டிக் கொள்கிறது.

6. தமிழக மீனவர்கள் நிலை

இந்திய அரசு கச்சத்தீவை இலங்கை அரசுக்குத் தாரை வார்த்ததின் காரணமாகத் தமிழக மீனவர்களின் வாழ்வுரிமை பறிபோய்விட்டது. அன்றாடம் கைது, வலைபறிப்பு, கொலை என்று மீனவர்கள் சீரழிந்து கொண்டுள்ளார்கள். தமிழக மீனவர்களை தனது குடிமக்கள் என்று இந்திய அரசு கொஞ்சமும் கருதிப்பார்க்காமல் தொடர்ந்து இலங்கை அரசின் ஆணவப் போக்கிற்குத் துணைபோய்க் கொண்டுள்ளது. இந்திய அரசு இலங்கைக்குச் செய்துவரும் எல்லா உதவிகளையும் நிறுத்திவிட்டு இலங்கை அரசை எச்சரிக்கை செய்வதுடன் கச்சத்தீவில் தமிழக மீனவர்களுக்குள்ள உரிமையை நிலைநாட்டத் துணை நிற்க வேண்டுமென்று இந்திய-இலங்கைத் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு வேண்டிக்கொள்கிறது.


7. தமிழ்வழிப் பள்ளிகளுக்கு ஆதரவு

தமிழ்நாட்டில் தமிழக அரசு மக்கள் தொகைப் பெருக்கத்துக்கேற்பத் தொடக்கப் பள்ளிகளைத் தொடங்க வில்லை. கல்வி வழங்கும் உரிமையை தனியார்களிடம் விட்டதின் விளைவாக அவர்கள் ஆங்கில வழிப் பள்ளிகளைத் தொடங்கிக் கொள்ளையடித்து வருகிறார்கள். ஆனால் தமிழக அரசு செய்யவேண்டிய பணியைச் செய்துவரும்-தமிழ்வழிப் பள்ளிகளை நடத்திவரும் தமிழர்களை ஊக்குவிப் பதற்கு மாறாக அரசு தொல்லைகொடுத்து வருகிறது. தமிழ்வழிப் பள்ளிகளை நடத்திவரும் தமிழர்களுக்கு அரசு எல்லா வகையிலும் உதவிசெய்யவேண்டு மென்று இந்திய-இலங்கைத் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு வேண்டிக் கொள்கிறது.

0 comments: