Monday, May 5, 2008

சாதிவெறி மின்வேலி - சேரிக்கும் ஊருக்குமிடையே

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஜெர்மனி மேற்கு நாடுகளுக்கும் சோவியத் ஒன்றியத்திற்கும் இடையே பங்கிடப் பட்டது. அப்போது பெர்லின் நகரில் ஒரு பகுதி சோவியத் ஒன்றியத்தின் கட்டுப்பாட்டிற்கு கொண்டுவரப் பட்டது. மேற்கு நாடுகள் வசமிருந்த பகுதிக்கும் சோவியத் ஒன்றியத்தின் கட்டுப்பாட்டிற்குள் இருந்த பகுதிக்கும் இடையே ஒரு சுவர் கட்டப்பட்டது. பெர்லின் நகர மக்கள் ஒருவருடன் மற்றொருவர் தொடர்பு கொள்வதை அந்த சுவர் தடுத்தது. ஜெர்மானிய மக்களின் வெறுப்புக்கு ஆளான பெர்லின் சுவர் 1995லிஆம் ஆண்டில் மக்களால் இடித்து தகர்க்கப்பட்டது.

ஆனால் தமிழ்நாட்டில் சிற்றூர் ஒன்றில் பெர்லின் சுவர் ஒன்று எழுப்பப்பட்டு அதற்கு மேலாக மின் வேலியும் அமைக்கப்பட்டுள்ள அதிர்ச்சிகரமான தகவல் கிடைத்துள்ளது.

நாட்டின் எல்லைகளில் மின்வேலிகள் அமைக்கப்படுவதைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், ஊருக்கும் சேரிக்கும் இடையே மின்வேலி அமைக்கப்பட்டுள்ளது என்ற அதிர்ச்சி தகவல் இதோ :

மதுரை மாவட்டத்தில் உள்ள உத்தபுரம் கிராமத்தில் 2000 தலித் குடும்பங்கள் உள்ளன. இவர்கள் இங்கு பிற சாதியினரைவிட எண்ணிக்கையில் அதிகம் உள்ளனர். தலித்துகளுக்கு எதிராக நீண்ட நாட்களாக சாதி வெறுப்பு இருப்பதால், பொதுப் பாதைகள் அனைத்தும் 600 மீட்டர் நீள சுவரால் தடுக்கப்பட்டிருக்கிறது,

இச்சுவர் 1990 முதலே இருக்கிறது. ஆனால் கடந்த 10 நாட்களாக இச்சுவரில் இரும்புக் கம்பிகள் மூலம் மின்சாரம் பாய்ச்சப்படுகிறது. தலித்துகள் சாதி இந்துக்களின் பகுதிக்குள் வருவதைத் தடுப்பதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாம்.

தேநீர்க் கடைகளிலும் சமூகக் கூடங்களிலும், சுடு காடுகளிலும், பேருந்து நிறுத்தங்களிலும் தலித்களுக்கு அனுமதி இல்லை. உத்தபுரம் கிராம பஞ்சாயத்து தலைவர் மாரிமுத்து என்பவர் தலித் தான். அவர், இங்குள்ள தலித்கள் பொருளாதார ரீதியில் முன்னேறியும் அவர்களுக்கு சமூக அந்தஸ்து கிடைக்கவில்லை என்று கூறுகிறார்.

கோயில் திருவிழாக்களின்போது தலித்துகள் அதில் பங்கேற்கவோ, தேர் வடம் பிடிக்கவோ அனுமதி இல்லை. பொது சொத்து ஆதாரங்களுக்கான அனைத்து உரிமைகளும் தலித்துகளுக்கு மறுக்கப்பட்டுள்ளன.

ஆதிக்க சாதி வெறியின் அடையாளமாகத் திகழும் உத்தபுரம் சுவரை இடித்துத் தகர்க்க தமிழ்த் தேசிய இன உணர்வாளர்கள் முன் வர வேண்டும். தமிழினத்திற்கு என்றும் அழியாத அவமானத்தை சாதி வெறியர்கள் ஏற்படுத்தியுள்ளனர். இதை அகற்றித் தீர வேண்டியது நமது நீங்காதக் கடமையாகும்.

0 comments: